இறந்த 25 ஆண்டுகளுக்கு பின் தாய்நாடு வந்த இலங்கை பிரஜையின் உடல்

dead body படத்தின் காப்புரிமை HECTOR VIVAS/GETTY IMAGES
Image caption (கோப்புப்படம்)

இத்தாலி நாட்டில் இறந்த இலங்கையைச் சேர்ந்தவரின் உடல் சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர், இன்று அவரது சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்டீபன் ஜோர்ஜ் என்பவர் இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். நோய்வாய்ப்பட்ட அவர் 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

அப்போது இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காரணத்தினாலும் இறந்தவரின் உடலினை இலங்கைக்கு கொண்டுவரமுடியாத காரணத்தினாலும் இத்தாலியில் இருந்த உறவினர்கள் 25 ஆண்டுகளுக்கு உடலினை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இறந்தவரின் உடலினை பாதுகாக்கும் நோக்கில் இத்தாலியில் உள்ள இறந்தவர்களின் உடல்களினை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றுடன் 25 ஆண்டுகள் உடலைப் பாதுகாக்க ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

அச்சமயம் இறந்தவரின் மனைவி இத்தாலி நாட்டிற்குச் சென்று கணவரின் உடலினை பார்வையிட்டு வந்துள்ளார்.

உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

ஒப்பந்தத்தின்படி 25 ஆண்டுகள் நிறைவடையாமல் குறித்த உடலினை பொறுப்பேற்றக முடியாத காரணத்தினால், ஒப்பந்தக்காலம் முடிந்த பின்னர் தற்பொழுது உறவினர்கள் உடலினை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் கொண்டுவந்துள்ளனர்.

ஸ்டீபன் ஜோர்ஜின் உடல் சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்