இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் : சுதாரிப்பதற்குள் தாக்குதல் நடத்திவிட்டார்கள் - பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேவர்தன தகவல்

புனித அந்தோணி கோயிலில் உடைக்கப்பட்ட மேரியின் சிலை படத்தின் காப்புரிமை Reuters
Image caption புனித அந்தோணி கோயிலில் உடைந்த மேரியின் சிலை

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடக அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்தார்.

"இதில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள்.இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்." என்றார்.

முன்பே தகவல்

அவர், "இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல் நடந்தேறிவிட்டன. இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். இனவாத பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன." என்றார்.

தாக்குதல்கள் தொடரலாம் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை நாம் புறந்தள்ள முடியாது. மேலும் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

சந்தேக நபர்

உளவுத் துறை இந்த தாக்குதல் குறித்து முன்பே வந்த தகவல்களில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரின் பெயரும் ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் இறந்தவரின் பெயரும் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

விசேஷ ஊடக பிரிவு

இந்த தாக்குதல்களை தொடர்ந்து விசேஷ ஊடக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இருந்த இந்த அமைப்பானது 2009ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை 207 பேர் மரணம்

ராணுவம், காவல்துறை மற்றும் விமானப்படை ஆகியற்றின ஊடக பொறுப்பாளர்கள் ஊடகத்தினரை இன்று மாலை சந்தித்தனர்.

"ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொழும்பில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு உள்ளதால் விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் விமானச் சீட்டை காண்பித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்" என்றனர்.

இதுவரை 207 பேர் மரணித்துள்ளனர்; 405 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 66 சடலங்கள் உள்ளன. அங்கு காயமடைந்த 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர் கொழும்பில் 104 சடலங்கள் உள்ளன. அங்கு 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கழுபோவிலாவில் உள்ள வைத்திய சாலையில் 2 சடலங்கள் உள்ளன, 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டகளப்பு வைத்திய சாலையில் 28 சடலங்கள் உள்ளன. அங்கு 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரகமாவில் 7 சடலங்கள் உள்ளன. 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இன்று என்ன நடந்தது?

இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலை மற்றும் தெமடகொட மேலும் ஆகிய இடங்களில் மேலும் இரு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை 9 மணியளவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இலங்கை பிரதமர் அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி இதுவரை 207 பேர் இறந்துள்ளனர். 450 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது.

கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களில் வெளிநாட்டினர் 27 பேர். மற்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் எத்தனை வெளிநாட்டினர் இறந்திருக்கிறார்கள் என்ற விவரம் முழுமையாக வெளிவரவில்லை.

கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இலங்கை குண்டுவெடிப்பு - நேரில் கண்டவர் சொல்வதென்ன?

இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 190 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்புவின் தெமடகொட பகுதியில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, குண்டு வெடித்ததில் மூன்று காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்'

கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடந்த இடத்தில் பிபிசியின் சிங்கள சேவையின் செய்தியாளர் அசாம் அமீன் உள்ளார்.

அவர் கூறுகையில், "அமைதியாக இருந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலையில், அனைவரும் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகளில் இருந்தனர். திடீரென்று இந்த தாக்குதல் நடந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஈஸ்டர் திருநாளில் - நூற்றுக்கும் அதிகமானோரை காவு வாங்கிய குண்டுவெடிப்பு

தேவாலயத்தில் உள்ள சில பாதிரியார்களிடம் நான் பேசிய போது, அவர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார்கள். புலனாய்வு போலீஸாரும் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஒரு தன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாகும்.

தேவாலயத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் பேசியபோது, அவரும் அதிர்ச்சியில் இருந்தார். இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதை தற்போது கூற முடியாது.

2009ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வாறான ஒரு சம்பவத்தை இலங்கை பார்த்ததில்லை. இலங்கை மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது "

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்