இலங்கை குண்டுவெடிப்பு: 'தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டது குறித்து எனக்கு முன்னரே தெரியாது' - மைத்திரிபால சிறிசேன

Sri Lanka attacks

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்தியா விடுத்திருந்த எச்சரிக்கை உள்பட, இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மாத்திரமன்றி, புலனாய்வு பிரிவிலும் மறுசீரமைப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமை காலை நிலவரப்படி இந்தத் தொடர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் கொழும்பு, நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

24 மணித்தியாலங்களில் பாதுகாப்பு பிரிவின் தலைவர்களை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை புலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்ட உளவுத் தகவல்கள் குறித்த பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் சிங்கள மக்கள், தமிழர்களை சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் பின்னரான காலப் பகுதியில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் கிடையாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மைத்திரிபால சிறிசேன

அதேபோன்று, அனைத்து முஸ்லிம் மக்களையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என ஜனாதிபதி, தமிழர் மற்றும் சிங்கள மக்களிடம் பகிரங்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகள் கிடையாது என குறிப்பிட்ட அவர், ஒரு சிலரே இனவாத ரீதியில் செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, நாட்டை அமைதி பாதைக்கு கொண்டு செல்லும் நோக்குடனேயே அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்ட அமுலாக்கத்தின் ஊடாக போலீஸார் மற்றும் ராணுவத்தினர் ஆகியோருக்கு சுயமாக செயற்பட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப்படாது என அவர் கூறியுள்ளார்.

இந்த பயங்கரவாத அமைப்பு தொடர்பில் 2017ஆம் ஆண்டு முதல் தகவல்கள் தமக்கு கிடைத்திருந்த போதிலும், அவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன்நிறுத்தும் அளவிற்கான சாட்சியங்கள் தம்வசம் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான புனித செபாஸ்டியன் தேவாலயம்.

ஒரே இரவில் 18 பேர் கைது

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மட்டும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கவால்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இதுவரை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது.

கைதுகள் மட்டுமல்லாது வாக்கி டாக்கி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள், வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலில் தேடுதல் நடவடிக்கை

இலங்கையில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்தாரியும் எனச் சந்தேகிக்கப்படும், சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை போலீஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையைப் பெற்று, இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர்.

காணொளிக் குறிப்பு,

இலங்கை குண்டுவெடிப்பில் தாக்குதல்தாரி இவரா?

மட்டக்களப்பு உதவிப் போலீஸ் அத்தியட்சகர் குமார சிறி, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளைக் கொண்ட குழுவினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

செவ்வாய் மாலை 5.20 மணியளவில் இந்தத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது.

இதன்போது மேற்படி பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப் பதிவகம் மற்றும் அங்கிருந்த கணிணி ஆகியவற்றினை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

படக்குறிப்பு,

சஹ்ரான் ஹாசிம்

இந்தப் பள்ளிவாசல் நிருவாகத்தின் தலைவராக சஹ்ரான் ஹாசிமும், அதன் செயலாளராக அவரின் சகோதரர் ஜெய்னி ஹாசிம் என்பவரும் செயற்பட்டு வந்துள்ளதாக போலீஸ் கூறுகின்றனர்.

இந்தப் பள்ளிவாசல், இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்படவில்லை என்றும், சமூக சேவை நிலையம் எனும் பெயரில் அது இயங்கி வந்துள்ளதாகவும் போலீஸார் மேலும் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மதப் பிரிவினருக்கும், மௌலவி சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜனாத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ஒன்றினை அடுத்து, சஹ்ரான் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையிலேயே, இலங்கையில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் செயற்பட்டுள்ளார் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சஹ்ரானின் சகோதரரும் காத்தான்குடியிலுள்ள அவரின் பள்ளிவாசல் நிருவாகத்தின் செயலாளருமான ஜெய்னி என்பவரும் தற்போது தலைமறைவாகியுள்ளார் என்று காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர்.

கெஹலிய ரம்பூக்வெல்ல கருத்து

தாக்குதல் பற்றி முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டது பற்றி தமக்குத் தெரியாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியிருந்தார்.

இது பற்றி செய்தியாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்பூக்வெல்ல "சர்வதேச உளவு சமூகம் இலங்கைக்கு தகவல் தெரிவிப்பது என்றால் இரண்டு துறைகள் மூலம்தான் தகவல் தெரிவிக்க முடியும். அவை, வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை. இதில் பாதுகாப்புத் துறைக்கு ஜனாதிபதிதான் அமைச்சர். எனவே, அரசாங்கத்துக்குதான் தகவலே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது பாதுகாப்புப் பிரிவு தங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் கூறுவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.

இவர் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :