இலங்கை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு நீர்கொழும்பு மசூதியில் தஞ்சமடைந்த பாகிஸ்தான் அஹமதியாக்கள் #Groundreport

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ், கொழும்பு
இலங்கை

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அஹமதியா முஸ்லிம்கள் அச்சத்தின் காரணமாக அங்குள்ள மசூதி ஒன்றில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

நீர்கொழும்பில் உள்ள ஃபாஸுல் மசூதியில் தற்போது சுமார் 200க்கும் மேற்பட்ட அஹமதியா முஸ்லிம்கள் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் அஹமதியா பிரிவு முஸ்லிம்களுக்கு என செயல்பட்டுவரும் ஐந்து மசூதிகளில் நீர் கொழும்பில் உள்ள இந்த ஃபாஸுல் மசூதியும் ஒன்று. பிற நான்கு அஹமதியா மசூதிகள் கொழும்பு, பேசாலை, புத்தளம், பொலனறுவ ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன.

குண்டு வெடிப்பு ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த நிலையில் 24ஆம் தேதிவாக்கில் பிரச்சனைகள் துவங்கின. நீர்கொழும்பு பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் கத்தோலிக்கர்களின் வீடுகளில்தான் இந்த முஸ்லிம்கள் குடியிருந்து வந்தனர். அங்குள்ள புனித செபாஸ்தியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளும் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கின.

"என் வீடு அந்த தேவாலயத்திலிருந்து சற்றுத் தூரத்தில் இருக்கிறது. குண்டு வெடிப்பிற்குப் பிறகு அந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் பயந்துவிட்டார். இங்கிருந்து போய்விடுங்கள் என்றார். நான் அந்த வீட்டிற்கு மாதம் 13 ஆயிரம் ரூபாயை வாடகையாகக் கொடுத்துவந்தேன். பலர், ஒரு வருட வாடகையையோ, ஆறு மாத வாடகையையோ மொத்தமாகக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது வெளியேறச் சொன்னால் என்ன செய்வது?" என்கிறார் மசூதியில் தஞ்சமைடந்திருக்கும் இளைஞரான ஹஃபீஸ் ரப்பா சோயிப்.

நீர்கொழும்பு பகுதியில் அஹமதியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் சுமார் 500 பேர் வரை வசிக்கிறார்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த அஹமதியாக்கள் சுமார் ஆயிரம் பேர் இந்த மசூதியை ஒட்டிய பகுதியில் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் தங்கள் மதப் பிரிவின் காரணமாக துன்புறுத்தப்பட்டதால், வெளியேறியவர்கள் இங்கே தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பும் உதவிகளை செய்துவருகிறது. பாகிஸ்தானிலிருந்து இங்கே வருபவர்கள்,சில ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுகிறார்கள். ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்வதற்கு முன்பாக தங்கிச் செல்லும் ஓர் இடமாகவே இந்தப் பகுதியில் அவர்கள் வசிக்கிறார்கள்.

"இன்று எனக்கு அமெரிக்கத் தூதரகத்தில் நேர்காணல் இருந்தது. ஆனால் இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அது ரத்தாகிவிட்டது. மீண்டும் எப்போது நடக்குமெனத் தெரியாது" எனக் கவலைப்படுகிறார் லாகூரைச் சேர்ந்த ஆமிர்.

2015ஆம் ஆண்டிலிருந்து இவர் நீர்கொழும்பில் வசித்துவருகிறார். இவரது வீட்டு உரிமையாளர் ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவர். மற்றவர்கள் கோபத்தில் ஆமிர் குடும்பத்தைத் தாக்கிவிடுவார்களோ என அவர் மிகவும் அஞ்சவே, தாய், மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் ஆமிர்.

பாகிஸ்தான் அஹமதியாக்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல் இங்கு வசிக்கும் மற்ற இஸ்லாமியர்களுக்கு இல்லையா?

"நாங்கள் இங்கேயே வசிப்பதால் பலருக்கும் எங்களை நன்றாகத் தெரியும். ஆனால், இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது இந்த அச்சத்திற்கு ஒரு காரணம்," என்கிறார் இந்த ஃபாஸுல் மசூதியைச் சேர்ந்த இப்ராஹிம் ரஹமத்துல்லா.

பிபிசி அந்த மசூதியில் இருந்தபோது, அங்கே தஞ்சம் புகுவதற்காக தொடர்ச்சியாக வந்திறங்கும் பாகிஸ்தானியர்களைப் பார்க்க முடிந்தது.

இந்த ஃபாஸுல் மசூதிக்கு காவல்துறையும் ராணுவமும் தற்போது பாதுகாப்பு அளித்துவருகின்றன. இருந்தபோதும் பாதுகாப்புக் காரணங்களால் சிறிது சிறிதாக இங்கிருக்கும் பாகிஸ்தானியர்கள் பேசாலையில் உள்ள மசூதிக்கு அனுப்பப்பட்டுவருகிறார்கள்.

சில சமயங்களில் ஒரு பேருந்தில் 65க்கும் மேற்பட்டவர்கள்கூட ஏற்றி அனுப்பப்படுகிறார்கள். கொடுத்த வாடகை, வாங்கிவைத்த பொருட்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு, ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி இந்தப் பயணத்தைத் தொடர்கிறார்கள் இந்த அஹமதியாக்கள்.

காணொளிக் குறிப்பு,

இலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :