இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு

A woman grieves in the aftermath of the Easter Sunday bombings in Sri Lanka, 25 April 2019 படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு.

இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம்.

கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு.

தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம்.

முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.

காவல்துறையினர் ஒன்பது தாக்குதலாளிகளில் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை.

''இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்'' என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

''அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

''தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்'' என்றும் ருவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது எப்படி?

நட்சத்திர விடுதிகள், தேவாலயங்கள் என இலங்கையிலுள்ள ஆறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

நீர்கொழும்புவிலுள்ள செபாஸ்டியன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதம்
Image caption: நீர்கொழும்புவிலுள்ள செபாஸ்டியன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதம் புகைப்பட காப்புரிமை Reuters

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இலங்கையிலுள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஐந்து மணிநேரத்தில் தெகிவலையிலுள்ள மிருகக் காட்சி சாலை அருகே ஏழாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

தெமடகொடவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எட்டாவது குண்டுவெடித்ததில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இலங்கை அதிரடி படையை சேர்ந்த வீரர்கள், வீடு ஒன்றில் சோதனையில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
Image caption: இலங்கை அதிரடி படையை சேர்ந்த வீரர்கள், வீடு ஒன்றில் சோதனையில் ஈடுபட்டபோது எடுத்த படம். புகைப்பட காப்புரிமை AFP

நாடுமுழுவதும் முக்கிய சமூக ஊடகங்களை முடக்குவதாக இலங்கை அரசு அறிவிப்பு.

ਸ੍மாலை ஆறு மணி முதல் மறுநாள் காலை ஆறு மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு.

இலங்கையின் இருவேறு பகுதிகளிலுள்ள மசூதிகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதுடன், முஸ்லிம்களுக்கு சொந்தமான இரண்டு கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டது.

நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள விமான நிலையம் அருகே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்தனர்.

புகைப்பட காப்புரிமை AFP

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட குறைந்தது 290 உயிரிழந்துள்ளதாகவும், 500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை நான்கு மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்புவில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெடனேடர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக பிபிசி செய்தியாளர் அசாம் அமீன் தெரிவித்தார்..

புதிய குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம்

அந்தோணியர் தேவாலயம் அருகே பீதியில் மக்கள் ஓடுவது போன்ற காணொளியை ‘தி கார்டியன்’ செய்தியாளர் மைக்கேல் சபி பகிர்ந்துள்ளார். வாகனம் ஒன்றில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை பாதுகாப்பு அதிகாரிகள் செயலிழக்க செய்ய முற்பட்டபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பிபிசி சிங்களா சேவையின் அசாம் அமீன் கூறுகிறார்.

இந்தியா விடுத்திருந்த எச்சரிக்கை உள்பட, இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து தமக்கு முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மாத்திரமன்றி, புலனாய்வு பிரிவிலும் மறுசீரமைப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தனது ராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, அவர் இன்று அனுப்பி வைத்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தாக்குதல்தாரியை வெளியே கூட்டி சென்று பலரின் உயிரை காத்த ரமேஷ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்

இந்தச் செய்தி குறித்து மேலும்