இலங்கை குண்டுவெடிப்பு-தாக்குதல் குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்?

இலங்கை படத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும், பிபிசி தமிழிடம் பேசிய சில இலங்கை முஸ்லிம்கள் தமது மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

இலங்கையிலுள்ள கிறிஸ்தவ மக்களின் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், தாம் வெட்கித் தலைகுனிந்து நிற்பதாக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் கவலை தெரிவித்தார்.

"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கடந்த காலங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம், முஸ்லிம் மக்கள் பொறுமை காத்து வந்துள்ளனர். முஸ்லிம்களுடன் எந்த விதத்திலும் பிரச்சனைகள் இல்லாத கிறிஸ்தவர்கள் மீது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் நடத்தியுள்ள தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று ஊடகவியலாளர் சஹாப்தீன் கூறினார்.

Image caption ஊடகவியலாளர் சஹாப்தீன்

இதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடவியலாளரும், வார உரைகல் எனும் பத்திரிகையின் ஆசிரியருமான புவி. ரஹ்மதுல்லாவும் பிபிசியிடம் இது தொடர்பாக பேசினார்.

1990ஆம் ஆண்டு, தமது ஊரிலுள்ள பள்ளிவாசல்களில் மக்கள் தொழுது கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமையை நினைவுபடுத்திப் பேசிய அவர், இறை வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மக்கள் மீது நடத்தப்பட்ட, இந்தக் கொடிய தாக்குதலின் வலியை, தம்மால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார்.

மேலும், இந்தத் தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது என்றும், இதனுடன் தொடர்புபட்டவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Image caption புவி. ரஹ்மதுல்லா

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மௌலவி இத்ரீஸ் ஹசன் கூறுகையில், "யுத்த காலத்தில்கூட மத ஸ்தலங்களைத் தாக்குவதை இஸ்லாம் கண்டிக்கிறது" என்றார்.

"அப்பாவிகள், மதகுருமார்கள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை யுத்த களத்தில் இருந்தாலும் கொல்லக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது" என்றும் அவர் கூறினார்.

எனவே, தேவாலயங்களில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு இஸ்லாத்தில் எவ்வித இடமும் கிடையாது என்றும் மௌலவி இத்ரீஸ் ஹசன் சுட்டிக்காட்டினார்.

Image caption றிசாத் ஏ. காதர்

அம்பாறை மாவட்டத்தின் மற்றொரு ஊடகவியலாளரும், அரச உத்தியோகத்தருமான றிசாத் ஏ. காதர் பிபிசியிடம் பேசுகையில், "கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த, காயப்பட்ட மக்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

"மேற்படி தாக்குதல் தொடர்பில் இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனிந்துள்ளது" எனவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்