அம்பாறை: 'சஹ்ரான் காசிமின் தந்தை மற்றும் சகோதரர்கள் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்'

சஹ்ரான் கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தார்?

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை பாதுகாப்பு படைகளால் சந்தேகிக்கப்படும் சஹ்ரான் காசிமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள், வெள்ளியன்று நடந்த பாதுகாப்பு படைகளின் கள நடவடிக்கைகளின்போது கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் எனும் அமைப்புக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் ஓர் அங்கமாக, கொழும்பில் உள்ள ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியாக செயல்பட்டார்.

சஹ்ரானின் சகோதரர்கள் ஜெய்னீ காசிம், றில்வான் காசிம் மற்றும் அவர்களது தந்தை மொஹமட் காசிம் ஆகியோர் வெள்ளியன்று கொல்லப்பட்டதை காவல்துறை வட்டாரங்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் உறுதி செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் காணொளி ஒன்றில் காணப்படும் அவர்கள் மூவரும், வெள்ளியன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்தத் தகவலை கல்முனை காவல் நிலைய அதிகாரி கமல் ஜயனத்தி உறுதி செய்துள்ளார்.

குறிப்பிட்ட அந்தக் காணொளியை அவர்கள் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்த வீட்டில்தான் பதிவு செய்தனர் என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

சஹ்ரானின் சொந்த ஊரான காத்தான்குடியில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைமையகத்தில் வெள்ளியன்று சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்