இலங்கை கல்முனை - சாய்ந்தமருது தாக்குதல்: குண்டுதாரிகளின் உடல்கள் மத சடங்குகளின்றி அடக்கம்

இலங்கை குண்டு வெடிப்பு.

இலங்கை கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த 10 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டன.

மத அனுசரிப்புகள் எதுவுமின்றி, போலீஸாரினால் இந்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக போலீஸ் ஊடக தொடர்பாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்தபகுதியிலுள்ள மதத் தலைவர்களின் வேண்டுக்கோளுக்கு அமைய, எந்த வித மத அனுசரிப்புகளும் நடத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 6 சிறார்களின் சடலங்கள் காணப்பட்டதாகவும், அந்த சடலங்கள் மத அனுசரிப்புகள் மூலமே நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் போலீஸ் ஊடக தொடர்பாளர் குறிப்பிட்டார்.

கல்முனை - சாய்ந்தமருது பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் கடந்த வெள்ளிகிழமை நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின்போது, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள் நிகழ்ந்தன.

பாதுகாப்பு பிரிவினர் நடத்திய பதில் தாக்குதல்கள் மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 16 பேர் இறந்ததாக போலீஸார் அறிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சாய்ந்தமருது பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை தாம் பொறுப்பேற்க போவதில்லை என அந்த பகுதியிலுள்ள மதத் தலைவர்கள் கூறியிருந்தனர்.

இதற்கமைய, போலீஸாரால் இன்றைய தினம் இந்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் தொடர்பாளர் போலீஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

ஆயுதங்கள் பறிமுதல்: எம்.பி.யின் ஓட்டுநர் கைது

மேலும், இலங்கையின் சம்மாந்துறையில் ஆயுதங்கள் சிலவற்றை நேற்று புதன்கிழமை படையினர் கைப்பற்றியதை அடுத்து, அதனுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் என்பவரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது ஓட்டுநரின் தாயாரின் வீட்டுக்கு முன்பாகவுள்ள பாழ் வளவு ஒன்றிலிருந்தே, புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும், இதனையடுத்து, தாய் வீட்டில் தங்கியிருந்த தனது ஓட்டுநரை படையினர் கைது செய்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் இன்று வியாழக்கிழமை கூட்டிய ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

அந்த இடத்திலிருந்து அமெரிக்கத் தயாரிப்புத் துப்பாக்கி உட்பட பல்வேறு ஆயுதங்கள் நிலத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படையினரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் இன்றைய ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் மேலும் தெரிவிக்கையில்; "ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட பாழ் வளவுக்கு முன்னால்தான் எனது சாரதியின் தாய் வீடு உள்ளது. தனது தந்தைக்கு சுகமில்லை என்கிற காரணத்தினால், எனது ஓட்டுநர் தனது குடும்பத்துடன் கடந்த ஒரு வாரமாக தாய் வீட்டில் தங்கி வந்தார். இந்த நிலையிலேயே, குறித்த பாழடைந்த வளவிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்தே எனது சாரதியை படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இருந்த போதும், எனது ஓட்டுநரின் கைதினை தடுக்கவோ, அவரை விடுவிக்கவோ நான் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

நேற்று எனது ஓட்டுநரை கைது செய்த படையினர், பகல் 12.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை கடுமையாக விசாரித்து விட்டு, பின்னர் சம்மாந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்" என்றார்.

"இதனையடுத்து சம்மாந்துறை போலீஸுக்கு எனது ஓட்டுநர் வழங்கிய வாக்குமூலத்தில்; கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதனை உறுதி செய்த பின்னர்தான், அவரை இன்று காலை போலீஸ் நிலையம் சென்று பார்த்து ஆறுதல் கூறினேன்" எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் கூறினார்.

இது தொடர்பில் சம்மாந்துறை போலீஸாரிடம் பிபிசி பேசியபோது, கைது செய்யப்பட்டவர் இன்னும் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சம்மாந்துறை போலீஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட பாழடைந்த வளவின் வாயிற் கதவு பூட்டப்பட்டிருந்ததாகவும், கதவினுடைய பூட்டின் சாவி - கைது செய்யப்பட்டவரிடம் இருந்ததாகவும் சம்மாந்துறை போலீஸார் கூறினர்.

மேலும், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த போலீஸ் மோப்ப நாய், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட இடத்திலிருந்து சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டுக்கே சென்றதாகவும் போலீஸார் சுட்டிக்காட்டினர்.

சஹ்ரானின் மனைவியை பார்க்கச் செல்லவில்லை

இதேவேளை, சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் காயமடைந்து, அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சஹ்ரானின் மனைவியை, நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் சந்திக்கச் சென்றதாக, இலங்கையின் பிரபல சிங்களப் பத்திரிகையொன்று முன்பக்கச் செய்தியை வெளியிட்டிருக்கின்றமை தொடர்பிலும், இன்றைய ஊடக சந்திப்பில் மன்சூர் விளக்கமளித்தார்.

"பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில், சாய்ந்தமருதைச் சேர்ந்த சில பொதுமக்கள் அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை பார்த்து, ஆறுதல் கூறிவிட்டு வருவதற்காகவே அம்பாறை மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். சாய்ந்தமருதைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் எனது நண்பருமான ஏ.எம். ஜெமீல் என்பவர்தான், அம்பாறை வைத்தியசாலைக்குச் சென்று வருவோம் என்று என்னிடம் கேட்டார். அதற்கிணங்கவே நாம் அங்கு சென்றோம்".

"அம்பாறை மருத்துவமனைக்குச் செல்லும் வரை, சஹ்ரானின் மனைவியும் அங்குதான் சிகிச்சை பெற்று வருகின்றார் என்கிற விடயம் எமக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தாலும், அதுபற்றி எமக்குப் பிரச்சினையில்லை. காயப்பட்ட அப்பாவிப் பொதுமக்களைப் பார்ப்பதற்காகவே நாம் அங்கு சென்றிருந்தோம்".

"இருந்தபோதும், நோயாளிகளைப் பார்வையிடுவதற்கான நேரத்துக்கு முன்பாகவே நாம் அங்கு சென்றதால், எம்மை காத்திருக்குமாறு அங்கு கூறினர். அதேவேளை, அங்கு ஓர் அசாதாரண சூழ்நிலையும் காணப்பட்டமையினால், நாம் திரும்பி வந்து விட்டோம்" என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் விளக்கமளித்தார்.

முகத்தை மூடும் ஆடை அணிவதில் உடன்பாடு இல்லை

இன்றை ஊடக சந்திப்பில், முஸ்லிம் பெண்கள் தமது கலாசார உடைகளை அணிவதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் சுட்டிக்காட்டினார்.

முகத்தை மூடும் வகையில் ஆடையணிவதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சட்டத்தை தான் வரவேற்பதாகக் கூறிய மன்சூர்; முகத்தை மறைத்து முஸ்லிம் பெண்கள் ஆடை அணிவதில் தனக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை என்றும் இதன்போது தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை NURPHOT

"இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தின் சட்டத்தை மதிக்கும் வகையில் முகத்தைத் திறந்து ஆடையணிய முடியாதவர்கள் வீட்டில் தங்கியிருப்பதே மேலானது" என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் குறிப்பிட்டார்.

"ஆயினும், தற்போதைய நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இனவாதக் கும்பல்களும், இனவாத ஊடகங்களும், முஸ்லிம் மக்களின் சாதாரண கலாசார உடைகளையே மாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கான வற்புறுத்தல்களை சில அலுவலகங்களில் கோருகின்ற செய்திகள் கிடைக்கப் பெறுகின்றன. அதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது, அது ஆட்சேபனைக்குரியது" என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை குண்டுவெடிப்பு: சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான் அஹமதியாக்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குண்டுவெடிப்புக்கு பிறகு சிக்கலில் தவிக்கும் நீர்கொழும்பு பாகிஸ்தான் அஹமதியாக்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :