ஈழத் தமிழர்களின் மே 18 நினைவேந்தலை தடுக்குமா இலங்கை ராணுவம்?

மே 18 நினைவேந்தல் படத்தின் காப்புரிமை FACEBOOK

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 18 நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் ஈழத் தமிழர்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர், அவசரகால சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது அமலில் உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் போலீஸார் மற்றும் முப்படையினர் பாரிய சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இதே போன்று சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த பின்னணியில், இலங்கையில் நிலைக்கொண்டிருந்த யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு, எதிர்வரும் 18ஆம் திகதியுடன் 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

படத்தின் காப்புரிமை FACEBOOK

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும், யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் இன்றும் அவ்வாறே காணப்படுகின்றன.

குறிப்பாக காணாமல் போனோர் பிரச்சினை, காணி விடுவிப்பு பிரச்சினை, தமிழர்களுக்கான உரிமை பிரச்சினை என அந்த நாட்களில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு இன்றும் முடிவு எட்டப்படாத நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து 9 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அவசரகால சட்ட அமலாக்கத்தினால் இம்முறை மே 18 நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.

'தனித்தேனும் நினைவேந்தலை நடத்துவேன்' - முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்

படத்தின் காப்புரிமை FACEBOOK

இந்த விடயம் தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சரும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தனது கணவரை ராணுவத்திடம் ஒப்படைத்து இன்றும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுமான அனந்தி சசிதரனிடம் பி.பி.சி தமிழ் வினவியது.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், தமிழர்களுக்கு அழுவதற்கு காணப்பட்ட உரிமையையும் இலங்கை அரசாங்கம் தற்போது பறித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 18ஆம் திகதி, தான் முள்ளிவாய்காலுக்கு தனித்தேனும் சென்று நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தப் போவதாக அவர் உறுதியளித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் தான் பலரை அழைத்து சென்றதாக கூறிய அவர், இந்த முறை தான் எவரையும் அழைத்து செல்ல போவதில்லை என சுட்டிக்காட்டினார்.

அவசரகால சட்ட விதிகளை பயன்படுத்தி, பலர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றமையினால், ஏனைய தரப்பினரை தான் கஷ்டத்திற்கு உட்படுத்த போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகக்கூடும் என்ற நிலைப்பாட்டில் இருந்த அரசாங்கம், இஸ்லாமிய பயங்கரவாதமொன்று உருவாகின்றமை குறித்து கவனம் செலுத்தவில்லை என அவர் குற்றச்சாட்டினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்