இலங்கை தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரவில்லை - அமைச்சர் பதியூதீன் மறுப்பு

ரிசாத் பதியூதீன்

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு, ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிடயம் தான் கோரியதாக கூறப்படுவதை அமைச்சர் ரிசாட் பதியூதீன் மறுத்துள்ளார்.

"ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர், கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் கோரிக்கை விடுத்தது உண்மைதான்" என்று, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராணுவத் தளபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், "அவ்வாறான எந்தவித கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை" என அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

ஆயினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக, ராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு தான் வினவியதை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

Image caption இலங்கையின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான ரிஷாத் பதியுதீனுடன் முகமது இப்ராஹிம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து, அவரையும் இந்த தாக்குதலில் தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்தன.

"தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு கூறினர். எனவே, நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் கோரியிருந்தனர்" என்று அமைச்சர் ரிசாட் பதியூதீன் கூறினார்.

"இதனையடுத்து ராணுவத் தளபதியை நான் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக விவரம் கூறினேன். மேலும், நபர் ஒருவரின் விவரத்தைக் கூறி, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விவரத்தையே ராணுவத் தளபதிடம் நான் கேட்டேன். ஆனால் அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை" என்று அமைச்சர் விவரித்தார்.

"தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் கிடையாது" - அமைச்சர் ரிசாத் பதியூதீன்

மேலும், "ராணுவத் தளபதியுடன் நடத்திய உரையாடலை எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளேன். தேவையாயின் அதனைத் தர முடியும்" என்றும் அமைச்சர் கூறினார்.

"இதனை தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் விடுக்குமாறு நான் கோரவில்லை என்பதனை பொறுப்புடன்கூறிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார் ரிசாத் பதியுதீன்.

"ராணுவத்தினரிடமோ போலீஸாரிடமோ வேறு எவரிடமோ எவரையும் விடுவிக்குமாறு நான் வேண்டுகோள் விடுவிக்கவில்ல" என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமையன்று, இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் ராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு, மே 18 நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில், இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துகின்றமை சர்ச்சைக்குரிய விடயமா என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் என சுட்டிக்காட்டிய ராணுவ தளபதி, நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகள் குறித்தும் இதன்போது கருத்து வெளியிடப்பட்டது.

படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY/GETTY IMAGES

இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் கிடையாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அத்துடன், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி முதல் மூன்று மாதங்கள், 9 மாதங்கள் மற்றும் இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் குறுகிய, இடை மற்றும் நீண்டகால திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புத்தளம் - நாத்தாண்டி - துன்மோதர பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் ராணுவத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது என ராணுவ தளபதி குறிப்பிட்டார்.

ராணுவத்தினர் இந்த சம்பவத்துடன் தொடர்புப்படவில்லை என்பதில் தனக்கு 95 சதவீத நம்பிக்கையுள்ளதாகவும் அவர் கூறினார்.

ராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் வகையில் வெளியான சிசிடிவி காணொளியை திரையில் ஒளிபரப்பியது பற்றி விசாரணைகளை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கிருந்த ராணுவ சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியிலுள்ள பெல்ட்டை சரிசெய்யும் வகையிலான காட்சி, தவறான பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறிய அவர், விரைவில் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை விடுதலை செய்வது குறித்து அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தெஹிவளை பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரையே அமைச்சர் ரிஷாட் பதியூதீன் விடுதலை செய்வது தொடர்பில் தன்னிடம் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ஒன்றரை வருடங்களுக்கு தன்னால் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என தான் அவருக்கு பதிலளித்ததாகவும் ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிவு

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்