இலங்கையில் புனர்வாழ்வு முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்ட முஸ்லிம் அகதிகள்

இலங்கை படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள ஒரு தொகுதி முஸ்லிம் அகதிகள் வவுனியா - பூந்தோட்டம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரிக்கு நேற்றிரவு அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 36 முஸ்லிம் அகதிகள் வவுனியாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்களை மீறியே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் அகதிகள் இலங்கையில் தஞ்சம் கோரியிருந்தனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குலுக்கு பின்னர், குறித்த முஸ்லிம் அகதிகள் இலங்கையில் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்லவுள்ள அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐநா, இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்தது.

இவ்வாறு விடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரியில் அவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI

இந்த நடவடிக்கைக்கு உள்ளுர் அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன்ன கடந்த வாரம் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்திருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஒரேயொரு கூட்டுறவு கல்லூரியான வவுனியா கூட்டுறவு கல்லூரி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரியில் 35 முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பதற்கான சந்தர்ப்பமும் இதுவரை வழங்கப்படவில்லை.

அத்துடன், வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகளை விடுமுறை தினமான இந்த இரண்டு தினங்களிலும் கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்