இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

சுயத்தொழிலால் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவது பகுதி இது.)

யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இறுதிக் கட்ட யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள பெண் ஒருவர் முல்லைத்தீவில் வாழ்ந்து வருகிறார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள கிருஷ்ணதாஸ் சாய்ராணிதான் அவர். கிருஷ்ணதாஸ் சாய்ராணியின் கணவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக செயற்பட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதித் தருணத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் சாய்ராணியின் கணவர் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, யுத்தம் வலுப்பெற்ற நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் சாய்ராணி சென்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த முகாமொன்றில் தனது அம்மா மற்றும் மகனுடன் வாழ்ந்த அவர், அந்த இடத்திலேயே தனது சுயதொழிலை ஆரம்பித்துள்ளார்.

தனது இரு தங்கத் தோடுகளை ஒரு வர்த்தகரிடம் வழங்கி, அதற்கு 1300 ரூபாய் பெறுமதியாக பப்பட மா மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பு ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த இரு பொருட்களை வைத்துக் கொண்டு தனது சுயத்தொழிலை ஆரம்பித்த சாய்ராணி, இன்று தனது உற்பத்திகளை சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு 10 வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் முன்னேறியுள்ளார்.

ரசாயண கலவைகள் அற்ற இயற்கை பாரம்பரிய மூலிகை உணவு உற்பத்தி, இன்று அவரை சர்வதேச அளவிற்கு செல்ல கைக்கொடுத்துள்ளது.

குறிப்பாக, இன்று அவரது உற்பத்தி பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாய்ராணி இன்று தொழில்வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளமையும் பாராட்டத்தக்கது.

மூலப்பொருள் கொள்வனவில் மாத்திரமே தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்ட அவர், தற்போது தமது உற்பத்திக்கு பெரும் வரவேற்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், தனது உற்பத்திகளில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை என்பதை வரவேற்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அவருக்கு தேசிய விருது வழங்கியுள்ளது.

அது மாத்திரமன்றி, சாய்ராணியின் உற்பத்தியை ஊக்கப்படுத்த எதிர்காலத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க உலக வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சாய்ராணி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :