இலங்கையில் சைபர் தாக்குதலால் முடங்கிய இணையதளங்கள்

இலங்கை வெளிநாட்டு தூதரகங்கள் மீது இணையத்தள தாக்குதல் படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களின் இணையதளங்கள் உள்ளிட்ட பல இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் ஒருங்கிணைப்பு மையம் தெரிவிக்கின்றது.

சைபர் தாக்குதல் நடத்தப்பட்டள்ள சில இணையதளங்கள் செயற்பாடுகள் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், பல இணையதளங்கள் வழமை போன்று செயற்பட்டு வருவதாகவும் இலங்கை கணனி அவசர தயார் ஒருங்கிணைப்பு மையத்தின் கணனி தகவல் பொறியிலாளர் என்.தீனதயாளன் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது உரிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பல தனியார் இணையதளங்களையும் இலக்கு வைத்த இந்த தாக்குத் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த இணையதளங்களில் காணப்படுகின்ற குறைப்பாடுகளின் ஊடாகவே இந்த ஊடுறுவல் இடம்பெற்றுள்ளதாக என்.தீனதயாளன் தெரிவிக்கின்றார்.

வி.பி.என் பயன்பாட்டின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டிய அவர், அதனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த சைபர் தாக்குதல் தொடர்பில் தற்போது உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தீனதயாளன் தெரிவித்தார்.

இதேவேளை, ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் வழமையாகவே இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஆண்டும் இதே போன்ற சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

"தமிழீழ சைபர் அணி" என்ற பெயரில் சமீபத்திய ஆண்டுகளிலும் இவ்வாறே தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படுகின்ற அச்சுறுத்தல் காரணமாக, பல குழுக்கள் தமது செய்திகளை வெளிகொணர்வதற்கு இணையதளங்களுக்குள் ஊடுறுவி, தமது கடும்போக்குவாத பிரசாரங்களை மேற்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக கணனி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால், நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையை கருத்திற் கொண்டு, அவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வதற்கு இடமளிக்காத வண்ணம், தமது இணையத்தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் இணையத்தள உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :