இலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக பௌத்த மதகுரு போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த மதகுருவுமான அத்துரலியே ரத்தன தேரர் படத்தின் காப்புரிமை Facebook
Image caption நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த மதகுருவுமான அத்துரலியே ரத்தன தேரர்

இலங்கையில் அதிகாரத்திலுள்ள மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை, அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து அகற்ற கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த மதகுருவுமான அத்துரலியே ரத்தன தேரர், இன்று, வெள்ளிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஆகியோரை, அவர்கள் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி இந்த உண்ணா விரதப் போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார்.

பௌத்தர்களின் புனிதத் தலமான கண்டியிலுள்ள தலதா மாளிகை முன்பாக, அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பயன்படுத்துவதாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தேரர், மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தன்னிச்சையாகச் செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

அரச நிறுவனங்கள் பலவற்றில் அமைச்சர் ரிசாத் பதியூதீன் மோசடி புரிந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் அப்போது தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரிசாத் பதியூதீன்

எனவே, இந்த நபர்களை அவர்களின் பதவிகளிலிருந்து அகற்ற வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்கள் மூவரையும் அவர்களின் பதவிகளிலிருந்து அகற்றும் வரை, தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றும், தேரர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர், சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பதவி நீக்கம் செய்யுமாறு தேரர் கோரிக்கை விடுத்துள்ள மூவரில், இரண்டு ஆளுநர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினராவர்.

அமைச்சர் ரிசாத் பதியூதீன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தைச் சேர்ந்தவராவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்