சஹ்ரான் பயன்படுத்தியதாக நம்பப்படும் கணினி மற்றும் பணம் கைப்பற்றல்

சஹ்ரான் ஹாஷிம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சஹ்ரான் ஹாஷிம்

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்தியதாக நம்பப்படும் மடிக் கணினி ஒன்றும் 35 லட்சம் ரூபாய் பணமும் இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதை போலீஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் - பாலமுனை பிரதேசத்திலுள்ள ஹுசைனியா நகரில் இன்று பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 35 லட்சம் ரூபாய் பணமும், நகைகள் சிலவும் கைப்பற்றப்பட்டன.

அண்மையில் கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சியாம் என்பவரிடம், பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளின்போது, இந்தப் பணம் மற்றும் கணினி பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

மேற்படி சியாம் என்பவரின் உறவினர் ஒருவருடைய வீட்டிலேயே இந்தப் பணமும் நகைகளும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியில் மடிக் கணினி ஒன்றையும் பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றினர்.

அரச புலனாய்வுப் பிரிவினரும் அம்பாறை போலீஸ் ஊழியர்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, இவை கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சியாம் என்பவர், பாலமுனை ஹுசைனியா நகரில் வசித்து வரும் தமது உறவினரிடம் வைத்திருக்குமாறு கூறி, மேற்படி பணம் மற்றும் நகை ஆகியவற்றினை ஒப்படைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அந்த உறவினரிடம் மடிக் கணினி ஒன்றையும் வைத்திருக்குமாறு கூறி சியாம் ஒப்படைக்க முயற்சித்த போதும், அதனை ஏற்க அவரது உறவினர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எனவே, அதனை அவர் எடுத்துச் சென்று அட்டாளைச்சேனை ஆற்றங்கரையினை அண்டிய பகுதியில் வீசியதாக விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.

சஹ்ரான் பயன்படுத்தியதாக நம்பப்படும் குறித்த மடிக் கணினி, நீரில் மூழ்கிய நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி பணம் மற்றும் மடிக்கணிணி ஆகியவற்றை சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலைத் குண்டுவெடிப்பை மேற்கொண்டு பலியாகிய சஹ்ரானின் சகோதரரிடமிருந்து சியாம் எனும் நபர் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்