முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல்: ''புத்தரால்கூட இலங்கையை காப்பாற்ற முடியாது'' - மனோ கணேசன்

பௌத்த படத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA/AFP/GETTY IMAGES
Image caption கோப்புப்படம்

'முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையாகிப் போனது' வருத்தமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் மாகாண ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று மாலை தங்கள் பதவியில் இருந்து விலகியிருந்தனர்

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நேற்று நாம். இன்று நீங்கள். நாளை மற்றவர்," என எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் மக்களுடன் தாம் தொடர்ந்தும் தோழமையுடன் இருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேர் சிந்தனையுள்ள அனைத்து இலங்கையர்களும் அதனையே செய்ய வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசினார்.

Image caption ரஊப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியூதீன்

முஸ்லிம் மக்களை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு வந்ததன் பின்னர், முஸ்லிம் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது தனக்கு வருத்தமளிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

நாட்டில் பிரச்சனைகள் வலுப்பெற போகின்றமையை அறிந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள், முன்னதாகவே இந்த தீர்மானத்தை எட்டியிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு முன்னதாகவே பதவி விலகும் தீர்மானத்தை முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் எட்டியிருக்கும் பட்சத்தில், முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் காலம் தாழ்த்தி, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளமையை தான் ஏற்றுக் கொள்ளாத போதிலும், இந்த தீர்மானத்தினால் நாடு சுமூகமான நிலைக்கு வந்துள்ளதை வரவேற்பதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

பௌத்த துறவிகளின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் நடத்தப்படுமானால், இலங்கையை கௌதம புத்தரினால் கூட காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்படும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

Image caption மனோ கணேசன்

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டார்.

பௌத்த துறவிகள் உண்ணாவிரதம் இருந்து, ஆர்ப்பாட்டங்களை நடத்தி அரசாங்கத்தை வழிநடத்துகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இதுவரை நிரூபிக்கப்பட்டாத பின்னணியில், இனவாத எண்ணங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் கூறினார்.

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பாட்டங்களை நடத்தி, இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலக செய்யும் நிலைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள் சித்தார்த்த கௌதம புத்தரையே அவமானப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் இலங்கை பௌத்த நாடு என்பதனை உலகம் ஏற்றுக் கொள்ளாது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்