இலங்கை தாக்குதல்: 'மைத்திரிபால சிறிசேனதேசிய பாதுகாப்பு சபையை உரிய காலத்தில் கூட்டவில்லை'

மைத்திரிபால சிறிசேன

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு சபையை உரிய காலத்தில், உரிய வகையில் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குற்றஞ்சுமத்தினார்.

இலங்கை மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தபோதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

தான் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி நியமிக்கப்பட்டதாக தெரிவித்த ஹேமசிறி பெர்ணான்டோ, தான் பதவி விலகும் வரை நான்கு தடவைகள் மாத்திரமே தேசிய பாதுகாப்பு சபையை ஜனாதிபதி கூட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு சபை வாராந்தம் கூடும் என நினைவூட்டிய அவர், தான் பதவிக்கு வந்ததன் பின்னர் அவ்வாறு இடம்பெறவில்லை எனவும் கூறினார்.

தேசிய பாதுகாப்பு சபையை கூட்டுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென தனக்கு அழைத்து உத்தரவிடுவதாகவும், குறுகிய காலத்திற்குள் பாதுகாப்பு சபையின் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு கூட்டப்படும் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டங்களுக்கு பிரதமர், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டாம் என தனக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான் பதவி வகித்த காலப் பகுதியில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க மற்றும் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ ஆகிய இருவரும் பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றுக்கு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்கட்சி உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, திலங்க சுமத்திபால மற்றும் லசந்த அலுவிஹார ஆகியோர் அழைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு எவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அழைக்கப்படுவது என வினவினார்.

ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமையவே அவர்கள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்குப்பற்றியதாக கூறிய அவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்குப்பற்றுவது தவறானது எனவும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எந்தவித சுயாதீன அதிகாரங்களையும் வழங்கவில்லை எனவும், ஜனாதிபதியை தான் சந்திப்பதற்கு கூட பல வார காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினால் சில சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த அமைப்பு குறித்து பாதுகாப்பு சபையில் ஆராயப்படுவதை விடுத்து, பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷ் குறித்தே தனது பதவி காலத்தில் நடந்த நான்கு கூட்டங்களின் போதும் ஆராயப்பட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் கூட, பாதுகாப்பு சபை கூட்டத்தில் சரியான ஆராயப்படவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தாக்குதலின் பின்னர் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகினால் ராஜதந்திர பதவியொன்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியதாக, பூஜித் ஜயசுந்தரவை மேற்கோள்காட்டி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இதன்போது கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும், தனக்கு அவ்வாறு எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை என கூறிய அவர், தானே சுயட்சையாக பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படுவதாக கூறிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, அதனை தனியாக அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்