இலங்கை தேசிய புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ் பதவி விலகல்: சிறிசேனா காரணமா?

சிசிர மெண்டீஸ் படத்தின் காப்புரிமை Sisira Mendis / Facebook

தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிசிர மெண்டீஸ் தனது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்ததாக பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

உடல்நல குறைவு என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி சிசிர மெண்டீஸ் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெற்றிடமாகியுள்ள புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பதவிக்கு, விரைவில் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஷாந்த கோட்டேகொட குறிப்பிட்டார்.

சாட்சியமளித்த மெண்டீஸ்

கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சிசிர மெண்டீஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாட்சியமளித்திருந்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் என ஐனாதிபதி நேற்று அறிவித்த நிலையில், சிசிர மெண்டீஸ் இன்று பதவி விலகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Sulochan

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போலீஸ் திணைக்களத்தின் சிறப்பு அதிகாரிகளுடன், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலைக்கு புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அரச புலனாய்வு தகவல்கள் ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்துவதை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இதுவரை சாட்சியமளித்தவர்கள் அனைவரும் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என கூறியுள்ள ஜனாதிபதி, தற்போது சேவையிலுள்ள எந்தவொரு பாதுகாப்பு அதிகாரியையும் தான் தெரிவுக்குழு முன்னிலைக்கு அனுப்ப போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு துறையில் தற்போது சேவையிலுள்ள அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதில் விசாரணைகள் நடத்தப்பட்டால், அந்த நடவடிக்கையானது, உயர்நீதிமன்ற விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சட்ட மாஅதிபர் தனக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட மாஅதிபரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தான் சபாநாயகருக்கு அறிவித்த போதிலும், சபாநாயகர் அதனை கருத்தில் கொள்ளாது நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர், நாடாளுமன்றத்தில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது, தனக்கு வருத்தமளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அதிருப்தியில் சிறிசேன

இதேவேளை, அமைச்சரவை கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக நேற்றிரவு கூட்டியிருந்தார்.

இதன்போது, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு விசாரணைகள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படத்தின் காப்புரிமை Sri lanka PMD

பாதுகாப்பு துறையை சார்ந்த எவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன் சாட்சியம் அளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழு கடந்த 6ம் தேதி இறுதியாகக் கூடியிருந்தது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாய விடுமுறையில் அனுப்பிய பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் சாட்சியமளித்திருந்தனர்.

தேசிய பாதுகாப்பு சபையை உரிய முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்ட வில்லை என பாதுகாப்பு முன்னாள் செயலாளர் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

அத்துடன், தன்னை பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகினால் தனக்கு இராஜதந்திர பதவியொன்றை வழங்குவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்ததாக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர சாட்சியமளித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, ஜனாதிபதி அமைச்சரவையை கூட்டி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

உடலுறவு வைத்துக் கொண்டு ரூ.40 தான் கொடுத்தார்: பாலியல் தொழிலாளியின் கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :