இலங்கையில் நரேந்திர மோதி - ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர்

narendramodi படத்தின் காப்புரிமை Twitter / Narendra modi

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கை சென்றடைந்தார்.

இலங்கை மீது ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆவார்.

கொழும்பில் உள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் 11 மணியளவில் இந்திய பிரதமர் வந்தடைந்தார்.

இந்திய பிரதமரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சென்ற மோதி தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்திய பிரதமருடன் 59 பிரதிநிதிகளும் வருகைத் தந்துள்ளதாக இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை முன்னிட்டு, கொழும்பு நகரில் பாதுகாப்ப பல மடங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோதி இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாக பதவி பிரமாணம் செய்துக் கொண்ட நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக புதுடெல்லி சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, இரண்டாவது பதவி காலத்தின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக நேற்றைய தினம் மாலத்தீவு சென்ற இந்திய பிரதமர், இன்று இலங்கையை வந்தடைந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு மூன்றாவது முறையாகப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :