இலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் என்ன? - விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பு

இலங்கை

இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து, குழுவின் தலைவரான உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொடவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏப்ரல் 22ஆம் திகதி விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொடவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இலங்கை மீதான தாக்குதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் மற்றும் அதன் பின்புலம் குறித்து ஆராய்வதற்காக இந்த விசாரணை குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இரண்டு கட்டங்களாக அமைந்த இந்த விசாரணை நடவடிக்கைகளின் இரண்டு இடைக்கால அறிக்கைகள் இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் காலங்களில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற பின்னணியில், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவும் விசாரணைகளை நடத்தி இன்று இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அத்துடன், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதன் விசாரணைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்த நாடாளுமன்ற விசாரணை குழு முன்னிலையில் தேசிய புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாட்சியமளித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற விசாரணை குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு பிரிவிலிருந்து விலகியவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 7ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதன்படி, தேசிய புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ், நேற்று முன்தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கடந்த 6ஆம் திகதி, நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய முறையில் பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டவில்லை என பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குற்றச்சாட்டியிருந்தார்.

மேலும், தனக்கு இராஜதந்திர பதவியொன்றை வழங்குவதாகவும், பொலிஸ் மாஅதிபர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் ஜனாதிபதி தனக்கு கூறியதாக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி வசம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :