இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற குழு - ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது

ஜனாதிபதி

இலங்கை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்ட அழைப்பை, தெரிவுக் குழு உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு நேற்றைய தினம் கூடிய சந்தர்ப்பத்தில், இரகசியமான இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட போதே, ஜனாதிபதியின் அழைப்பு நிராகரிக்கப்பட்டதாக தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார்.

தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினரான அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடாகவே, ஜனாதிபதி, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அழைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடாகவோ அல்லது தெரிவுக்குழு தலைவர் ஆனந்த குமாரசிறி ஊடாகவே இந்த அழைப்பை, ஜனாதிபதி விடுத்திருந்தால், அது குறித்து ஆராய்ந்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரின் ஊடாக உத்தியோகப்பற்றற்ற முறையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டமையினால், அதனை தாம் நிராகரித்ததாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது தெரிவுக்குழுவை உத்தியோகப்பூர்வமாக அழைக்கும் பட்சத்தில், தாம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஜனாதிபதி எதிராக சாட்சி

இலங்கை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பலர் ஜனாதிபதிக்கு எதிராகவும் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 6ஆம் தேதி சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை தன்னால் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது எனவும், அந்த தாக்குதலை பொறுப்பேற்றுக் கொண்டு தன்னை பதவி விலகுமாறும் ஜனாதிபதி தனக்கு உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸ் மாஅதிபர், தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.

அத்துடன், தனது பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில் தனக்கு வெளிநாட்டு இராஜதந்திர பதவியொன்றை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தியதாகவும் பூஜித் ஜயசுந்தர கூறியிருந்தார்.

மேலும், பாதுகாப்பு சபை கூட்டங்களை உரியவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டவில்லை என பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சி வழங்கியிருந்தார்.

சாட்சியங்களின் பின்னர் ஜனாதிபதியின் செயற்பாடு

இவ்வாறு சாட்சியங்கள் வழங்கப்பட்ட பின்னணியில், பாதுகாப்பு பிரிவில் தற்போது கடமையாற்றும் எவரும் இனிவரும் காலங்களில் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் 6ஆம் தேதி சாட்சியளித்திருந்த நிலையில், 7ஆம் தேதி ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவு அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தெரிவுக்குழு முன்னிலைக்கு பாதுகாப்பு அதிகாரிகளை அழைப்பதனை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும், தெரிவுக்குழு விசாரணைகளை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவது தவறான விடயம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார்.

தெரிவுக்குழு விடயங்கள் ஊடகங்களின் ஊடாக பகிரங்கப்படுத்தப்படுகின்றமையினால், நீதிமன்ற விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், நாடாளுமன்ற தெரிவுக்குழு விடயத்தில் உரிய தீர்மானமொன்று எட்டப்படும் வரை தான் அமைச்சரவை கூட்டங்களில் பங்கு பெற போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 7ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இறுதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதா?

ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

கடந்த வெள்ளிகிழமை ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய, நேற்றைய அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், திட்டமிட்ட வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடத்தப்பட்டது.

இந்த நாடாளுமன்ற குழுவின் விசாரணைகள், ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது.

நாட்டில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படாதுள்ளமை மிகவும் பாரதூரமான விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்