“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்” : அமைச்சர் குற்றச்சாட்டு

“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்” : அமைச்சர் குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுடன், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் மோதலொன்றை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பல்வேறு விடயங்கள் வெளியிடப்பட்டு வருவதாக ஜனாதிபதி கருத்து வெளியிடுகின்றார் என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என கோரி, அமைச்சரவை கூட்டங்களை ரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி இந்த செயற்பாட்டின் ஊடாக, வேண்டுமென்றே, அரசு, அரசாங்கம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் ஆகியவற்றை செயற்றிறன் அற்றதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரத்திற்கு உள்ள அதிகாரங்கள், ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரங்கள், நாடாளுமன்றம் வசம் காணப்படுகின்ற அதிகாரங்கள், நீதிமன்றம் வசம் காணப்படுகின்ற அதிகாரங்கள் ஆகியன இலங்கை அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அதனை ஜனாதிபதி மீறி செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசியலமைப்பு சரத்துக்களில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 52 நாட்கள் ஏற்பட்ட ஜனநாயக போராட்டத்தின் போது, மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியன தெளிவான உத்தரவை வழங்கியிருந்ததாக அவர் நினைவூட்டினார்.

இதன்படி, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரங்கள் என்ன? அந்த அதிகாரங்கள் எந்த இடத்தில் மட்டுப்படுத்தப்படுகின்றன? அதையும் தாண்டி, ஜனாதிபதியினால் எவ்வாறான விடயங்களை முன்னெடுக்க முடியும்? அந்த தீர்மானங்கள் முற்றுப் பெறும் இடம் ஆகியன நீதிமன்றத்தினால் தெளிவாக கூறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாடாளுமன்றம் வசம் காணப்படுகின்ற அதிகாரங்கள் தொடர்பிலும் 52 நாள் அரசியல் குழப்பநிலையின் போது நீதிமன்றம் தீர்ப்புக்களை வழங்கியிருந்ததாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நினைவூட்டினார்.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கும் விதம் மற்றும் பெரும்பான்மை இல்லாத ஒருவரை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறான பிரச்சினைகள் வந்தாலும், தனது அதிகாரங்களின் ஊடாக அரச பொறிமுறையை சரியான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி வசமே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையில், பட்டியலிடப்பட்ட 51 அமைச்சரவை பத்திரங்களும், புதிய 19 அமைச்சரவை பத்திரங்களுமாக மொத்தம் 70 அமைச்சரவை பத்திரங்கள் தற்போது அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட வேண்டிய நிலைமை காணப்படுவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அதேபோன்று அரச நிறுவனங்களுக்கு அதிகாரிகளை நியமித்தல் தொடர்பிலான 34 அமைச்சரவை பத்திரங்களும் காணப்படுகின்றன.

இவ்வாறு 104 அமைச்சரவை பத்திரங்கள் காணப்படுகின்ற நிலையில், அரச பொறிமுறை செயற்படுவதனை தடுக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு வரை காணப்பட்ட முறையற்ற அரசியலை சரி செய்யும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த இடத்திற்கு கொண்டு வந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்தும் செயற்பாடுகளை அவர் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு என்பதனை நாம் மிகவும் தெளிவாக கூறிக் கொள்ள வேண்டும் எனவும், நாடாளுமன்றத்தை, ஜனாதிபதி நேரடியாக சவாலுக்கு உட்படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது, நாடாளுமன்ற கோவைகளுக்கு அமைய அதன் தலைவரினால் நியமிக்கப்பட்ட ஒரு குழு என்பதுடன், அதனை ஜனாதிபதியின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயற்பாட்டை ஜனாதிபதி தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லும் பட்சத்தில், நாடு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலைமை எற்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் ஊடாக நாட்டிற்கு ஏற்பட்ட நட்டத்தை, ஜனாதிபதி அதேபோன்றதொரு நட்டத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.

ஜனாதிபதி, அமைச்சரவை கூட்டத்தை கூட்டாதமையினால், இந்த நாட்டில் மீண்டும் அரசியலமைப்பு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை நடத்தி, எதிர்வரும் வாரம் அமைச்சரவை கூட்டத்தை நடத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :