இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஐந்து சந்தேக நபர்கள் துபாயில் கைது

இலங்கை படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துபாயில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை 4 மணிக்கு சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான தாக்குதல் சம்பவத்திற்கு திட்டம் தீட்டிய மிக முக்கிய சந்தேக நபராக கருதப்படும் மொஹமட் மில்ஹானும் இவர்களில் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து துபாய் நோக்கி பயணித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், குறித்த சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வசமிருப்பதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றின் பொறுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியிலேயே, சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஐந்து சந்தேகநபர்கள் துபாயிலிருந்து இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக முறைப்பாடு

பயங்கரவாத செயற்பாடுகள், பயங்கரவாதிகளுக்கு உதவிகளை வழங்கியமை மற்றும் சொத்து சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மூன்று முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக 27 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக போலீஸ் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட பிரிவிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 4ஆம் தேதி முதல் கடந்த 12ஆம் தேதி வரை இந்த பிரிவு, மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்றுக் கொண்டது.

இதன்படி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக 12 முறைப்பாடுகளும், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக 2 முறைப்பாடுகளும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக 8 முறைப்பாடுகளும் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் என பலர் இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட பிரிவு கடந்த 12ஆம் தேதியுடன் கலைக்கப்படுவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் இனிவரும் காலங்களில் விசாரணைகளை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்