ஆடு, கோழி, வாத்து வளர்ப்பு: இலங்கை உள்நாட்டு போரிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் வெற்றி கதை

இலங்கை உள்நாட்டு போரிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் வெற்றி கதை

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமது வாழ்வாதாரத்திற்காக சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு வடக்குமாகாண பெண்கள் முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறு சுயதொழில் முயற்சிகளில் வடக்கு மாகாணத்தில் ஈடுபடுகின்ற பெண்கள் பலரும் சாதித்து வருவதுடன் ஏனைய பல பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு சிறந்த எடுத்தக்காட்டாக யாழ்ப்பாணம் மாவட்டம் பண்டத்தரிப்பு கிராமத்தை சேர்ந்த ஸ்ராலினி தனி ஒரு பெண்ணாக வாத்து பண்ணை ஆரம்பித்து இயற்கை விவசாயத்தை ஊக்கிவித்து வருகிறார்

வணிக மேலாண்மை கல்வி பயின்றுள்ள இவர், வங்கியில் கிடைத்த வேலையினை தவிர்த்துவிட்டு வாத்துப்பண்ணை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

தனது வாத்துப் பண்ணை மற்றும் இயற்கை விவசாயம் பற்றி பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார் ஸ்ராலினி.

"வணிக மேலாண்மையில் எனது உயர்தர கல்வியினை முடித்த பின்னர், 2016ஆம் ஆண்டு வாத்து பண்ணையினை ஆரம்பித்தேன். கொக்குவில் பொற்பதி பகுதியில் எனது பண்ணை அமைந்துள்ளது. உண்மையில் வாத்து வளர்ப்பு என்பது மிகவும் இலகுவான ஒன்றாகும். இயற்கையாக வளரக்கூடடிய அசோலா என்கின்ற பாசியினத்தை நான் வளர்த்து அதற்கு உணவளிக்கிறேன். அதே நேரம் கடைகளில் கிடைக்கும் உணவுகள் மற்றும் மரக்கறிக் கழிவுகள் என்பன வாத்துகளுக்கு உணவாக வழங்கலாம்."

"வாத்து என்பது எல்லா காலநிலைக்கும் ஏற்றவாறு வாழக்கூடியது. நாம் கோழிகளை எடுத்துக்கொண்டால் மழைகாலத்தில் தொடர்ந்து உயிரிழக்கும். ஆனால் வாத்து அவ்வாறு நோய் வாய்ப்படுவதில்லை. அதே நேரம் மழை, வெயில் மற்றும் குளிர் என எல்லா காலங்களிலும் வாத்துகள் உயிர்வாழும்."

"நான் வாத்து வளர்ப்பினை தேர்வு செய்ததன் காரணம் என்னவென்றால், கோழி வளர்ப்பில் ஏற்படும் பாதக தன்மையினை நிவர்த்தி செய்யும் முகமாக தான் நான் வாத்து வளர்ப்பில் ஈடுபட்டேன். உதாரணமாக கோழிவளர்ப்பு என்பது நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் வைத்து பார்ப்பது போன்றதாகும், ஆனால் வாத்து வளர்ப்பில் குஞ்சு பொரிச்சு வளர்ந்து இறைச்சியாகும் வரையில் நோய் ஏற்படாது மருந்துகள் கொடுக்கும் தேவை இருக்காது. வாத்து இறைச்சி முட்டைக்கு தற்போது மிகுந்த தேவையுள்ளது. 600ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரையில் லாபம் வழங்கக்கூடியதாக உள்ளது."

"நான் முழுக்க முழுக்க இயற்கை உணவுகளை வாத்துகளுக்கு வழங்குகிறேன். தாரா முட்டையினை அழகுகலை தொழில் சார் கலைஞர்களும் வாங்குகின்றனர் அதனைவிட தலைக்குக்கும் பயன்படுத்துகின்றனர். கோழி முட்டை 2 இன் சத்து தாரா முட்டை ஒன்றில் உள்ளது."

சீருயிர் என்ற எனது இந்த பண்ணையின் நோக்கம் ஒரு பண்ணையாளர் தனது விலங்குகளுக்கு இயற்கையான உணவுகளை எவ்வாறு உற்பத்தி செய்து வழங்குவது என்ற விடயத்தை பரப்புவதாகும்.

நான் வாத்து வளர்ப்புடன் நின்றுவிடாது ஆடு வளர்ப்பு முயற்சியுடன் இயற்கை பூச்சிக் கொல்லி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முயற்சியும் ஆரம்பித்துள்ளேன். இயற்கை பசலை ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி வந்தது என்றால், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இரசாயணம் விசிறும் மரக்கறிகளை பயன்படுத்துகிறோம். ஆனால் சில விவசாயிகள் மக்கள் நலன் கருதி இயற்கை விவசாய முறையினை பின்பற்றுகின்றனர் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை இயற்கையான கரசல்கள் மற்றும் பசலைகள் கிடைக்கப்பெறாமை அதை நான் கவனத்தில் கொண்டு அந்த உற்பத்திகளை செய்து வழங்குகின்றேன்.

வேப்பிலை கரைசல், உள்ளிக் கரைசல் என பலவகையான கரைசல்கள் அதாவது ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக பூச்சி பிரச்சனை உள்ளது என்றால் நாம் இரசாயன மருந்துகளை வாங்கி பயன்படுத்தாமல் இவ்வாறு இயற்கை கரைசல்களை பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் தற்போது நாம் சமூகத்தில் அருகிவரும் கற்றாழை, புதினா, சிறுகுறிஞ்சா, வல்லாரை போன்ற மூலிகைகளை தேடி எடுத்து அதனை வளர்த்து விற்பனை செய்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் நிறைய பெண்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சில பெண்கள் அவர்களுடைய பட்டப்படிப்பினை முடித்து வேலையின்றி உள்ளனர். அவர்கள் எதற்கும் கவலைப்படாது எங்களால் எதையும் சாதிக்கமுடியும் என நினைத்து முயற்சித்தால் வெற்றியடையாலாம். இவ்வாறு நாமே முன்வந்து நமது சிந்தனைக்குரிய தொழில் செய்தால் கட்டாயம் அதில் நாம் சாதிக்கமுடியும்.

நான் வாத்து பண்ணை ஆரம்பிக்கும் போது வங்கியில் சிறிய கடன் பெற்றுதான் ஆரம்பித்தேன். இது போன்று பிற பெண்களும் சுய தொழில் தொடங்கும் போது அரச தினைக்களங்களும் வங்கிகளும் உதவி செய்தால் அவர்களை ஊக்கிவிப்பதாக அமையும். குறைந்த வட்டி வீதங்களில் நுன்கடன்களை வழங்கவேண்டும். எனக்கு வங்கி, அரசதினைக்களங்கள், புனர்வாழ்வு அமைச்சகம் மற்றும் தொண்டு நிறுவனத்தின் உதவிகளை பெற்று எனது நிறுவனத்தை நான் விஸ்தரித்தேன் என்கிறார் ஸ்ராலினி.

நான் இந்த பண்ணையினை ஆரம்பிக்கும் போது எனது வீட்டின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்தேன். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்யவேண்டும் என வற்புறுத்தும் பெற்றோருக்கு மத்தியில் எனது தாய் தந்தை எனது இந்த முயற்சிக்கு ஆதரவு தந்தார்கள். எனக்கு வங்கியில் வேலை கிடைத்தும் அதனை தவிர்த்து இந்த பண்ணையினை ஆரம்பித்தேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :