இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு: சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மூவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

அத்தியட்சகர் ருவன் குணசேகர

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன் பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

41 வயதான ராஜ் கோபால் முதியன்சலாகே இஸ்மயில் மொஹமட் நஷிர், 21 வயதான சாகுல் ஹமீது ஹிஸ்புல்லா மற்றும் 29 வயதான மொஹமட் முக்தார் ஆஷிப் ரசாக் ஆகியோரே பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் வசம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

ராஜ் கோபால் முதியன்சலாகே இஸ்மயில் மொஹமட் என்ற நபர் நிகவரெட்டிய பகுதியில் கடந்த மே மாதம் முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேகநபர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன், நுவரெலியா பகுதியில் பயங்கரவாத பயிற்சிகளை பெற்றதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ஹம்பாந்தோட்டை பகுதியில் சஹ்ரானுடன் பயிற்சிகளை பெற்றுக் கொண்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் வெலிமடை பகுதியில் வைத்து சாகுல் ஹமீது ஹிஸ்புல்லா போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரானுடன் இணைந்து, ஹிஸ்புல்லா என்ற சந்தேகநபர் ஆயுதப் பயிற்சிகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விசாரணைகளில் மூன்றாவது சந்தேகநபரான மொஹமட் முக்தார் ஆஷிப் ரசாக் குறித்து பல விடயங்கள் தெரியவந்துள்ளன.

இதன்படி, கண்டி - பேராதனை பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் மொஹமட் முக்தார் ஆஷிப் ரசாக் கைது செய்யப்பட்டிருந்ததாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சந்தேகநபர் கண்டி - அருப்பல பகுதியில் பயங்கரவாத பயிற்சிகளை பெற்றுக் கொண்டமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்