இலங்கை மரண தண்டனை: தீர்மானத்தில் பின்வாங்கப் போவதில்லை - சிறிசேன

சிறிசேன படத்தின் காப்புரிமை Getty Images

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனை நாட்டுக்கு அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்துமாறு, நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, அவர் இதனை தெரிவித்தார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆதரவான மனநிலையை, மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரி கேட்டுக்கொண்டார்.

மரண தண்டனையை நீக்கும் சட்டம் வரைவு நாடாளுமன்றுக்குக் கொண்டு வரப்படுவது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிழலுலகத்தினர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதாக அமைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "மரண தண்டனையை நீக்கும் சட்ட வரைவு நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டால், அன்றைய தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவேன்" என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலுள்ள சிலரின் தேவைக்காக, மரண தண்டனை நிறைவேற்றுவதை நீக்குவதற்குவதற்கு சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய ஜனாதிபதி, அதன் மூலம் வெற்றியடைவது நாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிப்பதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் இடமளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ள ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் சவால் விடுத்தார்.

சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு, சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

மரண தண்டனையை அமலாக்கும் நோக்கத்துக்காக ஒன்றிணையுமாறு தான் அனைவருக்கும் அழைப்புவிடுப்பதாகவும் ஜனாதிபதி இந்த உரையில் குறிப்பிட்டார்.

இலங்கையில் மரண தண்டனை அமலில் உள்ளபோதும், 1974ம் ஆண்டுக்குப் பின்னர், யாருக்கும் இந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Thinkstock

இந்த நிலையிலேயே, 45 வருடங்களுக்குப் பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு, மரண தண்டனையை முதலில் நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1956ம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக, மரண தண்டனையை இல்லாமல் ஆக்கினார்.

ஆயினும், பண்டாரநாயக படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1959ம் ஆண்டு மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்பட்டது.

நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தாலும், ஜனாதிபதி ஒப்புதலுடனேயே அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று, இலங்கையின் தற்போதைய யாப்பில் (அரசமைப்புச் சட்டத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்