இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள்

"இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது"

இலங்கையின் சில பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களை பௌத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இந்து ஆலயங்கள் மற்றும் இந்து வரலாற்றை கொண்ட சில பகுதிகளில் பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்ட சில அசம்பாவித சம்பவங்களை அடுத்து தமிழர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள நந்தி கொடிகள் சேதமாக்கப்பட்டது, திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பௌத்த மயமாக்கல், கண்ணியாவின் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மற்றும் நுவரெலியா - கோட்லோஜ் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பௌத்த கொடியொன்றை பிக்குவொருவர் வலுக்கட்டாயமாக ஏற்றியது உள்ளிட்ட பல சம்பவங்கள் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் சர்ச்சை

முல்லைத்தீவு - செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பறக்கவிடப்பட்டிருந்த நந்தி கொடிகளை பிக்குவொருவர் வியாழக்கிழமை அறுத்து எறிந்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

Image caption முல்லைத்தீவு

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 6ஆம் தேதி 108 பானைகளில் பொங்கல் நிகழ்வொன்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்காக கட்டப்பட்டிருந்த நந்தி கொடிகளையே குறித்த பிக்கு அறுத்து வீசியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பிரச்சினை வலுப்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற பின்னணியிலேயே, நந்தி கொடிகள் அறுத்து வீசப்பட்டுள்ளன.

திருகோணமலை - கன்னியா பகுதியில் விகாரையொன்றை அமைப்பதற்கான திட்டம்

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரையொன்றை கட்டுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து கடந்த 16ஆம் திகதி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தை முன்னெடுக்க நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டதுடன், போராட்டங்களை நடத்திய தமிழர்கள் மீது சில சிங்களவர்கள் தாக்க முயற்சித்ததாகவும் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

கன்னியா பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பிள்ளையார் ஆலயம் மற்றும் இந்துக்கள் முக்கிய இடமான வெந்நீரூற்று கிணறுகளை பாதுகாப்பதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறான தடைகள் ஏற்பட்டாலும், கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் பாதுகாக்கப்படும் என போராட்டக்காரர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று கிணறு அமைந்துள்ள பகுதிக்குள் செல்வதற்கு மாவட்ட செயலாளர் காரியாலயத்தினால் கட்டணமொன்று அறவிடப்படுகின்றது.

இந்த கட்டண பற்றுச்சீட்டு சிங்கள மொழியில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

'அநுராதபுரம் காலத்திலிருந்து காணப்படுகின்ற திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று கிணறு, பௌத்த சமய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவுச்சீட்டினால் பெறப்படுகின்ற வருமானத்தின் ஊடாக இந்த இடம் பராமரிக்கப்படுகின்றது."

என சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.

எனினும், தமிழர்களின் வரலாற்றின் பிரகாரம், இராவணன் தனது தாயாரின் இறுதிக் கிரியைகள் செய்வதற்கு, தனது வாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும், அந்த இடத்திலேயே வெந்நீரூற்று உருவாகியதாகவும் தமிழர்கள் நம்பி வருகின்றனர்.

அந்த இடத்தில் ஏழு வெந்நீரூற்று கிணறுகள் இன்றும் காணப்படுகின்ற நிலையில், அதனை பெரும்பான்மை சமூகத்தினர் தம்வசப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

தமிழர் அரசியல்வாதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

திருகோணமலை கன்னியா பகுதி தமிழர்களுக்கான வரலாற்றை கொண்ட பகுதி என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் மனோ கணேஷன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தில் கடமையாற்றும் 32 ஆராய்ச்சியாளர்களும் சிங்களவர்கள் என்பதுடன், தமிழர்கள் தொல்பொருள் திணைக்களத்தில் இல்லாமையினால் தமிழர்களின் வரலாறு அழிந்து போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்திற்கு தமிழ் ஆராய்ச்சியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை கன்னியா பகுதியில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு - நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைப்பது சட்டவிரோதமானது எனவும் இதன்போது ஜனாதிபதி யின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டார்.

நுவரெலியா - கந்தபளை - கோட்லோஜ் பகுதியில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட முன்னெடுக்கப்படும் முயற்சிகளை தடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்