சண்டிக்க ஹத்துறுசிங்க பதவிவிலக உத்தரவு: ’போட்டியில் வெற்றி பெற்றால்தான் சம்பளம்’ - இலங்கை கிரிக்கெட் வாரியம்

’இலங்கை அணி வெற்றிப் பெற்றால் வீரர்களுக்கு சம்பளம்...அதேதான் பயிற்சியாளர்களுக்கும்’ படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு சண்டிக்க ஹத்துறுசிங்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிறைவேற்று குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களின் பதவி காலத்தை நீடிக்காது இருப்பதற்கு நிறைவேற்று குழுவில் தீரமானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியுடனான போட்டிகளின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முழு பயிற்சியாளர்களையும் நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து உடனடியாக தான் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் பதில்

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துறுசிங்கவுடன் உரையாடுவதற்கான தேவை தனக்கு கிடையாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சந்திக்க ஹத்துறுசிங்கவை தான் பதவி விலகுமாறு ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்த அவர், மறுபரிசீலனை செய்யுமாறே தான் பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி வெற்றியீட்டினால் மாத்திரமே வீரர்களுக்கு சம்பளத்தை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நடைமுறை பயிற்றுவிப்பாளருக்கும் உரித்தாக வேண்டும் என கூறியுள்ளார்.

சந்திக்க ஹத்துறுசிங்கவிற்கு அநீதி இழைக்க தான் விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பயிற்றுவிப்பாளர்களை மாற்றுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், தான் சட்ட மாஅதிபர் மூலம் நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வங்கதேச அணியுடனான இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியை, நுவன் குலசேகரவின் பெயரில் நடத்துமாறு தான் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவிக்கின்றார்.

புதிய கிரிக்கெட் யாப்பு நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்களின் யோசனைகளுடன் தயாரிக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு வரைவை தான் நாடாளுமன்றத்தில் சமர்பித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்