கறுப்பு ஜூலை - 1983-இல் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் நடந்தது என்ன?

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை நடந்தேறி 36 வருடங்கள் பூர்த்தி.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வாரங்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்

கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள் என அனைத்தையும் அழிக்கும் செயற்படாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

கறுப்பு ஜுலை ஏற்படுவதற்கான காரணம்?

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாக கூறப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.

கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவத்தினர் முதலில் உயிரிழந்திருந்தனர், அதன்பின்னர் காயமடைந்த இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு - பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகைத் தந்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வருகைத் தந்துள்ளதாக பொய் கருத்துக்கள் வெளியாகிய நிலையில், சிறியளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டி கொலைசெய்யப்பட்டதாகவும், பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.

இலங்கையில் தமது சொத்துக்களை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதல் முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர்.

பஸ்களில் வருகைத் தந்த பலர், தமது ஊரை தீக்கிரையாக்கியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரத்தினபுரியை சேர்ந்த பெண்ணான எஸ்.கமலாஷினி தெரிவிக்கின்றார்.

'நிறைய பஸ்கள்ள நிறைய பேர் வந்தாங்க. கத்தி, அரிவாள் ஆயுதங்கள எடுத்துகிட்டு வந்து, ஊரையே சேதப்படுத்தினாங்க. நெருப்பு வச்சாங்க. எங்கட வீட்ட உடைக்க அவங்க வந்த போது, பக்கத்து வீட்டுல இருந்த சிங்கள மக்களே எங்களையும் காப்பாத்தினாங்க. நிறைய பேர் காடுகளுக்குள்ள ஓடி ஒளிஞ்சிகிட்டாங்க" என எஸ்.கமலாஷினி தெரிவித்தார்.

கறுப்பு ஜுலை என்பது தமிழர்களுக்கு மாத்திரமன்றி, சிங்களவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திய ஒரு சம்பவம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

'கறுப்பு ஜுலை என்பது தமிழர்களுக்கு மாத்திரமன்றி, சிங்களவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திய ஒரு சம்பவம். கறுப்பு ஜுலை சம்பவத்தினால் சிங்கள மக்களை சர்வதேச சமூகம் தவறாக கோணத்தில் பார்த்தது. இது சிங்கள மக்களுக்கும் கறுப்பு ஜுலை. அதுக்கு பிறகே 30 வருட கால யுத்தம் வந்தது. யுத்த காலப் பகுதியில் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு போனார்கள். அவர்களின் சொத்துக்கள் இல்லாது போனது. இரண்டு பக்கமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். கறுப்பு ஜுலையின் ஆரம்பமே அது. அன்று அதை அரசியல் ரீதியில் நிறுத்தியிருந்தால், இன்று இலங்கைக்கு இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது" என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்