இலங்கையில் வெளிநாட்டு மதுபானங்களை பாதுகாப்பு ஸ்டிக்கரின்றி விற்பனை செய்ய தடை

இலங்கை படத்தின் காப்புரிமை Getty Images

கலால் வரித் திணைக்களத்தின் பாதுகாப்பு ஸ்டிக்கர் இன்றி, வெளிநாட்டு மதுபானங்களை இலங்கைக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதுபானங்களை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலால் வரித் திணைக்களத்தின பாதுகாப்பு ஸ்டிக்கர் இன்றி, வெளிநாட்டு மதுபானங்களை இலங்கையில் விற்பனை செய்தல், தம்வசம் வைத்திருத்தல், கொண்டு செல்லுதல் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் உள்நாட்டு மதுபானங்களுக்கும் எதிர்வரும் காலங்களில் இந்த பாதுகாப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சகம் குறிப்பிடுகின்றது.

இலங்கையில் வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்யும் 23 நிறுவனங்கள் செயற்பட்டு வருவதுடன், நாடு முழுவதும் சுமார் 4000 மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.

இந்த 23 நிறுவனங்களினால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களை கலால்வரித் திணைக்களத்தின் பாதுகாப்பு ஸ்டிக்கர் இன்றி விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான நிலையங்களில் செயற்படுகின்ற வரி இன்றி பொருட்களை கொள்வனவு செய்யும் வர்த்தக நிலையங்களுக்கான வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்கள் காணப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வர்த்தக நிலையங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மதுபானங்களை கலால் வரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியன பரிசோதனைக்கு உட்படுத்தி, பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவது அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் பிரகாரம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகின்ற வெளிநாட்டு மதுபானங்களை நாட்டிற்குள் கொண்டு வருகின்றமை தடை செய்யப்படுவதுடன், தரம் குறைந்த மற்றும் போலி மதுபானங்களை நுகர்வோருக்கு விநியோகிப்பதும் நிறுத்தப்படும் என நிதி அமைச்சகம் குறிப்பிடுகின்றது.

அத்துடன், புதிய சுகாதார நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதன் ஊடாக நுகர்வோருக்கு தரமான மதுபானங்களை விநியோகிக்க முடியும் என அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலால் வரித் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுகின்ற ஸ்டிக்கர்களின் உண்மை தன்மையை அறிந்துக் கொள்ளும் வகையிலான கையடக்கத் தொலைபேசி ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் குறிப்பிடுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மற்றும் உள்நாட்டு மதுபானங்களுக்கு கலால் வரித் திணைக்களத்தினால் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் திணைக்களத்தின் வருமானம் மேலும் அதிகரிக்கும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை வெளியிடுகின்றது.

2016ஆம் ஆண்டு 120 பில்லியன் ரூபாயாக காணப்பட்ட கலால் வரித் திணைக்களத்தின் வருமானம், 2019ஆம் ஆண்டு 130 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்படப்பட்டுள்ளது.

கலால் வரித் திணைக்களத்தின் 2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதி வரை 66 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்