இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை கைது செய்ய பிடியாணை

முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன்

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற பாரிய நிதி மோசடியின் பிரதான சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பிக்க ஜானகி ராஜரத்ன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிடியாணை உத்தரவை ஆங்கில மொழியில் விடுப்பதற்கும் நீதியரசர்கள் இன்று தீர்மானித்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி முறிகள் மோசடி

இலங்கை மத்திய வங்கியில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முறிகள் விநியோகத்தின் போது 10,058 பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

இந்த மோசடியின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு 688,762,100 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் பிரஜையான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பத்தினிகே சமரசிறி ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

உள்ளக தகவல்களை திரட்டி முறிகளை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டதாக கூறி மூன்றாவது தரப்பான பப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

படத்தின் காப்புரிமை DINUKA LIYANAWATTE

இந்த நிலையில், முறிகள் மோசடி தொடர்பான பிரதான சந்தேகநபரான கருதப்படும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அர்ஜுன் மகேந்திரனிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரன் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் பிரியந்த நாவான நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்