விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி - இலங்கையில் ஒருவர் கைது

விடுதலைப் புலிகள் படத்தின் காப்புரிமை Getty Images

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது இதே குற்றச்சாட்டின் கீழ் பத்து நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது கைதாகும்.

கல்முனை - மருதமுனை பகுதியில் வைத்து நேற்று, செவ்வாய், மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

அந்தத் தகவல் எவ்வாறு கிடைத்தது என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் போலீசார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

முந்தைய கைது

ஏற்கனவே,, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சி - பளை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபன் கடந்த கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

ராணுவத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே வைத்தியர் சின்னையா சிவரூபன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ராணுவத்தினால் கைது செய்யப்பட்ட வைத்தியர், பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் கீழ் யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

வைத்தியர் சின்னையா சிவரூபனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கிளிநொச்சி - பளை பகுதியிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

ஏ.கே - 47 துப்பாக்கியொன்றும், அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு மெகஸின்களும், 120 துப்பாக்கி தோட்டாக்களும், 11 கைக்குண்டுகளும், 10 கிலோகிராம் எடையுடைய எஃப்.ஈ 10 ரக வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

இது மாத்திரமன்றி கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட மேலும் பல சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

நேற்று கைதான சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாணம் - கடற்கரை பகுதியிலிருந்து மேலும் சில வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வைத்தியர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சிக்கும் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபனிடம் தொடர்ந்தும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

விற்பனைபிரதிநிதி

விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு கைது செய்த நபர், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய தில்லைநாதன் ஆனந்தராஜ் என்பவராவார்.இவர் தனியார் நிறுவனமொன்றின் பிரதேச விற்பனை முகாமையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பதாக 119 அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த கைது நடந்தது. இவரைக் கைது செய்த விசேட அதிரடிப்படையினர், கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்