இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: குண்டுதாரி உடற்பாகங்கள் இந்து மயானத்தில் இருந்து தோண்டியெடுப்பு

ஈஸ்டர் தாக்குதல்

மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த, சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் தலை உள்ளிட்ட உடற் பாகங்கள் இன்று திங்கட்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன.

குறித்த உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன.

என்ன நடந்தது?

ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்கள் மீது சஹ்ரான் காசிம் தலைமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, மட்டக்களப்பிலுள்ள சியோன் தேவாலயத்திலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதலை காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய எம்.என்.எம். ஆஸாத் எனும் நபர் நடத்தியதாக, பின்னர் நடந்த விசாரணைகள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகளில் போலீசாரால் கண்டறியப்பட்டது.

சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதேவேளை, தற்கொலைத் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆஸாத் எனும் மேற்படி குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த நபரின் உடற்பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு, கடந்த ஜுன் மாதம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடற் பாகங்கள் மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

இதனை அறிந்த அந்தப் பிரதேச மக்கள், அவரது உடற் பாகங்களை உடனடியாக அங்கிருந்து தோண்டியெடுத்து அகற்றுமாறு கோரி, மறுநாள் 27ஆம் தேதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, மட்டக்களப்பு பிரதேசத்தில் போக்குவரத்துகள் முடங்கின. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

நீதிமன்ற உத்தரவு

இதனையடுத்து, கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் உடற் பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி உத்தரவிட்டது.

குறித்த உடற் பாகங்களைத் தோண்டியெடுத்து வேறொரு பொருத்தமான இடத்தில் அடக்கம் செய்யுமாறும், அதுவரையில் அந்த உடற் பாகங்களை மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் வைக்குமாறும், இதன்போது நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

தோண்டியெடுப்பு

இதற்கு அமையவே, இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை போலீஸார் தோண்டியெடுத்தனர்.

தற்போது அந்த உடற் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சஹ்ரான் குழந்தைகளை மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு

இந்நிலையில், சஹ்ரான் ஹாசிமின் மகளை அவரது மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் குறித்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சஹ்ரானின் மனைவி சாதியா மற்றும் மகள் ஆகியோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர்.

சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இதுவரை பயங்கரவாத தடுப்பு பிரிவின் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சஹரானின் மகளை அவரது மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இன்று மாலை உத்தரவு பிறப்பித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்