இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு: சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா?

மலிங்கா படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானிற்கான கிரிக்கெட் பயணத்தை தவிர்ப்பதன் ஊடாக, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடனான உடன்படிக்கையை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளும், மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கலந்துரையாடல்

இந்த நிலையில், பாகிஸ்தானிற்கான கிரிக்கெட் விஜயம் தொடர்பிலான விசேஷ கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டிருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கலந்துரையாடலின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் பயணத்தை தவிர்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரோஷன் நிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனஞ்ஜய டி சில்வா, திஸர பெரேரா, அகில தனஞ்ஜய, லசித் மலிங்கா, எஞ்சலோ மெத்தீவ்ஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் தங்கள் பயணத்தை தவிர்க்க திட்டமுட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

விருப்பமும், எதிர்ப்பும்

பாகிஸ்தான் தொடரில் பங்குப்பெறுவதற்கு 70 சதவீத வீரர்கள் விருப்பத்தை தெரிவித்த போதிலும், 30 சதவீத வீரர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது பாகிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராயப்பட்டதாக தினேஷ் சந்திமால் குறிப்பிடுகின்றார்.

படத்தின் காப்புரிமை Sri Lanka Cricket

எனினும், இந்த போட்டியில் கலந்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தாம் தீர்மானமொன்றை எட்டவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், லசித் மலிங்கா மாறுப்பட்ட கருத்தொன்றையே முன்வைத்திருந்தார்.

நியூஸிலாந்து அணியுடனான போட்டி நிறைவடைந்ததை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை சந்திக்க வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்திருந்த நிலையிலேயே தாம் இந்த சந்திப்பிற்கு வருகைத் தந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் விஜயம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதா? என ஊடகவியலாளர்கள் வினவிய போது, அவ்வாறு எதுவும் கலந்துரையாடப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்காக மாத்திரமே தாம் வருகைத் தந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

உடன்படிக்கை மீறல்

பாகிஸ்தானுக்கான விஜயத்தை தவிர்ப்பதன் ஊடாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை மீறுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.

Image caption நல்லையா தேவராஜன்

பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் வீரர்கள் அனைவரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கீழ் உள்ளமையினால் அவர்கள் உடன்படிக்கையை மீறும் செயற்பாடாக கருத முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வீரர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்படுமாக இருந்தால், அந்த வீரர்கள் அதற்கான பதிலை வழங்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், விளையாட்டு வீரர்களின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான விஷயம் என்பதற்காகவே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் இந்த விஷயம் தொடர்பில் மௌனம் காத்து வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.

லசித் மாலிங்க, எஞ்சலோ மெத்தீவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன போன்ற முன்னணி வீரர்களும் இந்த தீர்மானத்திற்குள் உள்ளடங்கியுள்ளமையினால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மிகவும் சிந்தித்தே செயற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட நடவடிக்கை

இவ்வாறான தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணி பாரிய சரிவை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நல்லையா தேவராஜன் குறிப்பிடுகின்றார்.

உயிர் அச்சுறுத்தல் என்ற காரணம் முன்வைக்கப்படுகின்றமையினால், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கோ அல்லது சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கோ வீரர்களை மீறி தீர்மானமொன்றை எட்ட முடியாது என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.

உயிர் அச்சுறுத்தலை முன்னிலைப்படுத்தி, உடன்படிக்கையொன்று மீறப்படுமாக இருந்தால், உடன்படிக்கையை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்திரா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

தமக்கான அச்சுறுத்தல் காணப்படுகின்றமையை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமாக இருந்தால், அந்த வீரர்களுக்கு பாகிஸ்தான் விஜயத்தை தவிர்க்க அதிகாரம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒருவருடைய உயிரை மாய்த்துக் கொள்வதற்காக உடன்படிக்கை செய்துக்கொள்ள முடியாது என கூறிய அவர், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கை இந்த விடயத்தில் செல்லுபடியாகாத நிலைமை காணப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உடன்படிக்கை செய்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் காணப்படுகின்ற சூழ்நிலை, பின்னரான காலப் பகுதியில் மாற்றம் பெறுமாக இருந்தால், அது உடன்படிக்கையை மீறிய செயற்பாடாக கருத முடியாது என சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்திரா சுட்டிக்காட்டினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்