பாகிஸ்தானில் விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பதற்கு இந்தியா காரணமா?

இலங்கை வீரர்கள்

பாகிஸ்தானில் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடரை இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் தவிர்த்ததன் பின்னணியில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக வெளியான செய்தியை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் செல்ல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு தெரிவித்ததற்கு இந்தியாவின் தலையீடு உள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மை கிடையாது என அவர் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியை இலக்கு வைத்து பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image caption விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ

இந்த தீர்மானத்தை எட்டியுள்ள கிரிக்கெட் வீரர்களின் தீர்மானத்தை தாம் மதிப்பதாக கூறியுள்ள அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அனுப்பும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையிடம் பலம் பொருந்திய அணியொன்று உள்ளதாகவும், பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் மண்ணில் வைத்து வீழ்த்துவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும், மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளும் பாகிஸ்தானில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 வீரர்கள் பாகிஸ்தான் விஜயத்தை நேற்று முன்தினம் நிராகரித்திருந்தனர்.

பாகிஸ்தானில் காணப்படுகின்ற பாதுகாப்பு பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது.

நிரோஷன், குசல் ஜனித் பெரேரா, தனஞ்ஜய டி சில்வா, திஸர பெரேரா, அகில தனஞ்ஜய, லசித் மலிங்கா, எஞ்சலோ மாத்யூஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்