மகிந்த ராஜபக்ஷ: 'சீனாவை அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'

மகிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

சீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமொன்று இலங்கையிடமிருந்து 2 பில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தானது, சீனா அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மகிந்தவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கடன் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்காக இலங்கையினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் நிதியை சீன நிறுவனம் மோசடி செய்துள்ளதாக ஜனாதிபதி தாமரை கோபுர திறப்பு விழாவின்போது தெரிவித்திருந்தார்.

இலங்கையினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பணத்துக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பான தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட காலப் பகுதியான 2012ஆம் ஆண்டு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, அப்போதைய ஜனாதிபதியான தனக்கு கீழேயே இயங்கி வந்ததாக மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கோபுர நிர்மாணப் பணிகளுக்காக 104.3 மில்லியன் அமெரிக்க டாலர் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சீனாவின் எக்ஸிஸ் வங்கியினால் 88.6 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படக்குறிப்பு,

மைத்திரிபால சிறிசேன

இந்த தொகையில் எஞ்சிய தொகையை இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்பாடுகளுக்காக சைனா நெஷனல் இலக்ரோனிக்ஸ் மற்றும் எலிட் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து திட்டத்தை முன்னெடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், 2015ஆம் ஆண்டில் தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்ட போதிலும், புதிதாக ஆட்சி அமைத்த அரசாங்கம் அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தியமையினால் அந்த நடவடிக்கை தாமதமாகியதாக அவர் கூறினார்.

இந்த பின்னணியில், குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக சைனா நெஷனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு 2 பில்லியன் ரூபா பணத்தை வைப்பு செய்தமைக்கான ஆவணங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்றும் தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகளை சைனா நெஷனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனமே முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டி அவர், 2 பில்லியன் ரூபாய் பணத்தை சீனாவின் எலிட் நிறுவனத்திற்கு வழங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் சைனா நெஷனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கு மாத்திரமே செலுத்தியுள்ளமைக்கான ஆவணங்கள் உள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சீனாவிற்கு வழங்கிய நிதித் தொகை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது, சீனாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயற்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபகக்ஷ கூறியுள்ளார்.

இலங்கைக்கு பல்வேறு வகையில் உதவிகளை வழங்கிய நட்பு நாடான சீனாவை, வெளிப்படையாக அவமானப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :