இலங்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்: ரத்து செய்யும் யோசனையை திரும்பப் பெற்ற ரணில்

ரணில் விக்கிரமசிங்கே - மைத்ரிபால சிறிசேன படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரணில் விக்கிரமசிங்கே - மைத்ரிபால சிறிசேன

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம், பெரும்பான்மை அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் விசேட அமைச்சரவை கூட்டமொன்றை மாலை வேளையில் கூட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதன்படி, விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை கூடியது.

அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்.

எனினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் தேவை தற்போது காணப்படவில்லை என அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான அமைச்சர்கள் சுட்டிக்காட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ஹரின் பெர்ணான்டோ, பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்த இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் அமைச்சரவை பத்திரத்திற்கு எதிராக பெரும்பான்மையான அமைச்சர்கள் குரல் எழுப்பியதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இலங்கை ஜனாதிபதி செயலகம்.

''இவ்வாறான சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அது தோல்வியுற்ற மனப்பாங்குடன் முன்னெடுக்கும் செயற்பாடாகவே மக்கள் கருதுவார்கள். இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்து எமது தரப்பை பிரதமர் பலவீனமாக்கியுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

இந்த விடயத்தில் பிரதமரே முன்னிலையிலிருந்து செயற்பட்டார் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம். நாம் அந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் நடவடிக்கையானது, நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்லும் செயற்பாடாகும்" என ரவூப் ஹக்கீம் கூறினார்.

இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க தற்போது எவரும் தயாரில்லை என அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் தேவை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாஸவின் பதில்

அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.

ஜனநாயகத்தை மதிக்கும் எவரும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்ய முயற்சிக்க மாட்டார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறினார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption சஜித் பிரேமதாஸ

அமைச்சரவையிலுள்ள பெரும்பான்மையினர் இந்த தீர்மானத்திற்கு எதிராகவே செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்து

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவிக்கிறார்.

Image caption விமல் வீரவன்ச.

தேர்தலில் தோல்வியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது, ஜனாதிபதித் தேர்தலை நேரடியாக எதிர்கொள்ள வருமாறு விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

நிறைவேற்று அதிகாரம் இல்லாது செய்ய வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யோசனையை தற்போது எதிர்க்கும் இந்த அரசாங்கத்தின் மீது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Image caption எம்.ஏ.சுமந்திரன்

இந்த செயற்பாட்டின் ஊடாக சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் மோசமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

வாக்குறுதிகள் மற்றும் ஆணைகளை கைவிடும் செயற்பாடு கால் நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் கொள்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம் போன்றோர் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் தருணம் இதுவல்லவென கருத்து தெரிவித்துள்ள பின்னணியில், நிறைவேற்று அதிகாரம் இல்லாது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :