இலங்கை சுற்றுலா துறை: ஈஸ்டர் தாக்குதல் சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறதா?

மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறதா இலங்கை சுற்றுலாத் துறை?

இலங்கையின் எழில்மிகு பெந்தோட்டை கடற்கரையில் தனக்கு வருவாய் ஈட்ட முயற்சிக்கிறார் ஜிலான் ராஜித.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்ஃபிங் போர்டு மற்றும் ஓய்வுக்கான மெத்தைகளை வாடகைக்கு விடுவதுதான் இவரது தொழில்.

ஆனால் சுற்றுலாப் பயணிகளைத்தான் காண முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன் வரை ஒரு பரபரப்பான சுற்றுலாக் கடற்கரை இது.

ஆனால், ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு நிலைமையே மாறிவிட்டது

கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

"இரண்டு ஆண்டுகளாக ஓர் ஓட்டலில் வேலை பார்த்து வந்தேன். ஆனால் ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பிற்குப் பிறகு எனக்கு வேலை போய்விட்டது. பல வாடிக்கையாளர்கள் தங்களது முன்பதிவை ரத்து செய்துவிட்டனர். எங்களது ஓட்டலில் மட்டும் ஐம்பது பேர் வேலை இழந்துவிட்டோம். இங்கு வரும் வெளிநாட்டவருக்கு கடலில் சர்ஃபிங் செய்ய சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறேன். ஆனால், நீங்களே பாருங்கள். இங்கு சுற்றுலாப் பயணிகளே இல்லை" என்று கூறுகிறார் ஜிலான் ராஜித.

Image caption ஜிலான் ராஜித

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை செல்லவேண்டாம் என விடுத்திருந்த அறிவுறுத்தலை பல நாடுகள் திரும்ப பெற்றுக் கொண்டதில் இருந்து, இலங்கையின் சுற்றுலாத் துறை மீண்டும் வளர்ச்சி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க, பல வெளிநாட்டவருக்கான நுழைவு அனுமதி கட்டணத்தையும் இலங்கை அரசு ரத்து செய்து விட்டது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஜெட் விங் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் ஹிரன் கூரே, "சுற்றுலாத் துறை மீண்டும் வளர்ச்சி பெற ஆரம்பித்துவிட்டது. வன்முறையை சந்தித்த மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், நாங்கள் மீட்சி பெற ஒன்பது மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆகும் என நினைத்தோம். ஆனால், வெகு வேகமாக மீண்டும் சுற்றுலாத் துறை வளர்வதற்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எங்களது ஓட்டலில் ஐம்பது முதல் அறுபது சதவிகிதம் வரையிலான அறைகளில் விருந்தினர்கள் தங்கி இருக்கிறார்கள். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடக்கம்" என்று கூறுகிறார்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இலங்கை மீண்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெற்றது.

இத்தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக சில வன்முறை சம்பவங்கள் நடந்தன

இந்த வன்முறை, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதை சற்று பாதித்தது.

ஆனால், தங்கள் விடுமுறையைக் கழிக்க சுற்றுலாப் பயணிகள் இது போன்ற கடற்கரைகளுக்கு மீண்டும் வருவது ஜிலான் போன்றோரின் வாழ்க்கை ஆதாரத்திற்கு மிக அத்தியாவசியமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்