விமான சேவை மீண்டும் தொடக்கம்: யாழ்ப்பாணம் - சென்னை விமானத்தால் பொருளாதார பலன்கள் என்ன?

விமானம்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தடை பட்டிருந்த யாழ்ப்பாணம் - இந்தியா இடையிலான விமான சேவை 41 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வழியாக இந்த சேவை செயல்படவுள்ளது.

முதற்கட்டமாக, யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்ததிற்கு முன்பு இந்த விமான நிலையம்தான் இந்தியாவிற்கான பிராந்திய விமான நிலையமாக செயற்பட்டது.

யாழ்ப்பாணம் - தமிழ்நாடு மக்களுக்கிடையில் உள்ள வணிக ரீதியாக செயற்பாட்டினை இந்த விமான போக்குவரத்து ஊக்குவிக்கும்.

கடந்த 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிந்து 10 வருடங்கள் நிறைவடைந்த பின்னரும், யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்களால் வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

Image caption யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு

இதனால் நேர்த்தியாக தேர்வு செய்யப்படாத தொழில் முயற்சிகளால் ஏற்பட்ட தோல்விகள் வடக்கு மாகாண மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

தற்போது பெரும்பாலான வர்த்தகர்கள் தமது வணிக பயணத்தினை கொழும்பினூடாக மேற்கொள்கின்றனர். இதனால், இனிவரும் காலங்களில் வர்த்தகர்கள் வணிக தொடர்புகளை இலகுவாக மேற்கொள்வதோடு, மாணவர்கள் உயர் கல்வி முயற்சிகளையும் இலகுவாக மேற்கொள்ளமுடியும். வடக்கு மாகாண இளைஞர்களும், இளம் பெண்களும் தமது தொழில்சார் திறன்களை வளர்த்துகொள்ளகூடிய சூழல்களும் உருவாகும்.

எனினும் போர் காரணமாக இந்தியாவிற்கான சேவை நிறுத்தப்பட்டு உள்ளுர் சேவைகள் மட்டுமே இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் வணிகர் கழக உபதலைவர் ஆர்.ஜெயசேகரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"யாழ்ப்பாணம் வணிகர் கழகம் விரைவில் ஒரு வர்த்தக குழுவுடன் தமிழ்நாடு செல்லவுள்ளது. இந்த விமான நிலையம் ஊடாக இந்த குழு பயணிக்கவுள்ளது."

"இந்தக்குழு சென்னை வர்த்தக சம்மேளத்துடனும் கைத்தொழில் சம்மேளனத்துடனும் கலந்துரையாடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் இந்தியத் துணைத் தூதரகம் உதவிசெய்கிறது."

கைத்தொழில் அமைச்சு ஊடாக அங்குள்ள கைத்தொழில்கையும் நாம் பார்வையிடவுள்ளோம். நாம் வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் தொடர்பாகவும், வடக்கில் தொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பாகவும் நாம் ஆராயவுள்ளோம். இலகுவான சந்தை வாய்ப்பினை பெற்றுகொள்ளகூடிய ஆய்வினையும் இதன்போது செய்யவுள்ளதாக ஜெயசேகரன் தெரிவித்தார்.

Image caption யாழ்ப்பாணம் வணிகர் கழக உபதலைவர் ஆர்.ஜெயசேகரன்

யுத்தம் முடிந்த பின்பு பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் திறக்குமாறு இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்திடம் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்து வந்தது. அதற்கு மேலாக மாகாண சபை மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் அதிக கவனம் எடுத்து செயற்பட்டார்கள் என்கிறார் ஜெயசேகரன்.

இதன் மூலம் சுற்றுலா துறை மேம்படக்கூடிய வாய்ப்பும் அதிகம் உள்ளது. கடந்த காலத்தில் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் சரக்கு போக்குவரதது இல்லை. பயணியர் விமான சேவை மட்டும்தான் இடம்பெற்றது.

தற்போதும் பயணியர் விமான சேவைதான். ஆனால் வர்த்தக நோக்கத்தோடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் 70 சதவீத பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

பொருட்கள் கொள்வனவு பேச்சுவார்த்தை இந்தியா சென்றுதான் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இனி இந்த விமான நிலையம் வழியாக செல்லும்போது பணம், நேரம் மிச்சமாகும். இதுபோல காங்கேசன்துறை துறைமுகத்தையும் திறக்கவேண்டும் என்பதுதான் எமது அவா என்கிறார் ஜெயசேகரன்.

2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கப்பல்களை இங்கு சேவையில் ஈடுபடுத்தமுடியும். கடந்த காலத்தில் 2500 மெட்ரிக் டன் கப்பல் சேவை இருந்தது. சமீப காலத்தில் சீமெண்ட் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆகவே பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு காங்கேசன்துறை துறைமுகத்தை நாம் பயன்படுத்தமுடியும்.

ஆகையால் துறைமுகமும் திறக்கப்பட்டால் ஏற்றுமதி, இறக்குமதி சுலபமாக இருக்கும். இதன்மூலம் வடக்கு மாகாணம் பொருளாதார முன்னேற்றமடையக்கூடிய சூழல் உள்ளது என ஜெயசேகரன் தெரிவித்தார்

Image caption யாழ் விமான நிலையம் 1981ஆம் ஆண்டு

கடந்த கால உரிமை போரட்ட நேரங்களில் தமிழ்நாடு பல வழிகளில் கைகொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டு இந்தியா சென்ற மக்கள் தமிழ்நாட்டு அரசால் அரவணைக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

பல வகையில் தமிழ்நாட்டு மக்கள் எமக்கு உதவியதை நாம் மறக்கமுடியாது. எனக்கூறும் ஜெயசேகரன், இந்த விமான பயணத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு உருவாகும் என்கிறார்.

மதுரை - யாழ்பாணம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் முதல் விமானம் சென்னையில் இருந்து சேவையில் ஈடுபடுவதாக உள்ளது.

மதுரையில் இருந்து தினசரி இரண்டு விமானம் கொழும்புக்கு செல்கிறது. ஆனால் இலங்கையில் வட மாகாணத்துடன்தான் நாம் அதிக தொடர்பில் உள்ளோம் ஆகையால் மதுரையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைத்திற்கு விமானம் இயக்கப்படவேண்டும். என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என். ஜெகதீசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு மதுரை பயணியர் விமான சேவை இருக்குமானால், இலங்கையின் வட மாகாணம் வணிக ரீதியாக அபிவிருத்தி அடையும். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 7 மணிநேரம் பயணிக்க வேண்டியிருப்பது கடினம் என தமிழ்நாடு வணிகர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை உருவானால் அதிக போக்குவரத்து தொடர்பு உருவாகும் இதனால் வணிகம் அதிகரிக்கும் என்கிறார் ஜெகதீசன்

Image caption தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என். ஜெகதீசன்

வடக்கு மாகாணத்தில் அதிக தமிழ் மக்கள் உள்ளனர். இளம் தலைமுறைகள் அதிகம் பேர் தொழில் வணிகத்தை தெரியாதவர்களாக உள்ளனர். 30 ஆண்டுகால யுத்தத்தை பார்த்து அதன் பின்னர் அதிகமான தொழில் துறையினை அவர்கள் கண்டதில்லை. அது சார்ந்த அதிக பயிற்சிகளை நாம் அவர்களுக்கு வழங்கலாம் என ஜெகதீசன் கூறுகிறார்.

"முதலீடுகளுக்கு ஏற்ற தொழில் முயற்சிகள் தொடர்பான பயிற்களை வழங்கி வினைத்திறனான ஏற்றுமதிகளை உருவாக்கமுடியும். நம்மிடம் 4,200 பேர் உள்ளனர். இவர்கள் மூலம் இதன் வாய்ப்புக்களை யாழ்ப்பாணம் இளம் தலைமுறைக்கு உருவாக்கி கொடுக்க முடியும். அதனால் வேலைவாய்ப்பு உருவாகும். வடபகுதி அபிவிருத்தியில் முன்னோக்கிச் செல்லும்."

சுற்றுலா சார்ந்த அபிவிருத்திகள் அதிகம் இடம்பெறும். புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்படும். இவை அனைத்தும் இடம்பெறுவதற்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தினூடான தொடர்பு அதிகரிக்கவேண்டும் என்பதுடன் கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படவேண்டும் என ஜெகதீசன் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எமது வணிகக்குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது எமது ஆய்வுகளை செய்தோம். இன்னொரு சந்தர்ப்பதில் நாம் பயணம் செய்வதற்கு தயாராக உள்ளோம். வடக்கு மாகாணம் நம் ரத்த உறவுகள் வாழும் பிரதேசம் அதனை அபிவிருத்தி செய்ய எமக்கு ஆர்வம் உள்ளது என்றகிறார் ஜெகதீசன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்