இலங்கையின் புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள்

  • ரஞ்ஜன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் வெற்றி கொள்ள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்காளர்களின் வாக்குகள் மிக முக்கியமானதாகும்.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள் மிக அத்தியாவசியமாகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்காளர்கள், இந்த தேர்தலில் அதிகளவில் வாக்குகளை பதிவு செய்தால், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கதாக அமையும் என அரசியல் ஆய்வாளரும், பேராதனை பல்கலைக்கழக அரசியல் பிரிவின் முன்னாள் பிரதம அதிகாரியுமான பேராசிரியர் நவரத்ன பண்டார தெரிவிக்கின்றார்.

படக்குறிப்பு,

முஸ்லிம்கள் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா.

குறிப்பாக, 70 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வந்தால், அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மாற்று வாக்கு பதிவு (வாக்காளர்கள், யார் ஜனாதிபதியாக வேண்டுமென தாங்கள் விரும்புகின்ற முதலாவது தெரிவு, இரண்டாவது தெரிவு, மூன்றாவது தெரிவு என மூன்று பேருக்கு வாக்களிக்கும் முறை ) என்ற நடைமுறையை பின்பற்றியே இந்த முறை தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

வாக்காளர்கள் தமது முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரிவுகளை பயன்படுத்த வேண்டிய நிலைமை இந்த முறைத் தேர்தலில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

முதலாவது இடத்தை பிடிக்கும் வேட்பாளர், 50 சதவீத வாக்குகளை பெற்றுக் கொள்ளாத பட்சத்தில், இரண்டாவது தெரிவு கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்படும் என பேராசிரியர் கூறுகின்றார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் நடவடிக்கைகளும், தென் பகுதியிலுள்ள வாக்காளர்களின் நடவடிக்கைகளும் முற்றிலும் மாறுப்பட்டதாகவே அமையும் என பேராசிரியர் நவரத்ன பண்டார தெரிவிக்கின்றார்.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி என இரண்டு தேர்தல் மாவட்டங்கள் மட்டுமே காணப்படுகின்றது.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை என மூன்று தேர்தல் மாவட்டங்கள் காணப்படுகின்றன.

இனவாதம் மற்றும் மதவாதம்

படக்குறிப்பு,

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்

பெரும்பான்மை பௌத்த வாக்குகளை இலக்காக கொண்டு, இன மற்றும் மதவாதங்கள் தூண்டிவிடும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரிய பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையின் தென் பகுதியில் இனம், மதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்குகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் தெரிவிக்கின்றார்.

எனினும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் எதிரிகளாகவே காணப்படுவார்கள் எனவும் அவர் கூறுகின்றார்.

பட மூலாதாரம், Getty Images

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 35 வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் முதல் தருணம் இதுவாகும்.

2005, 2010 மற்றும் 2015 ஆகிய ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வேட்பாளர்களுக்கு பெரிய சவாலாக அமைந்திருந்தன.

2005 ஜனாதிபதித் தேர்தல்

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகள், முழு தேர்தலில் பெரிய தாக்கத்தை செலுத்தியிருந்தன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலின் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷ 48, 87,152 வாக்குகளுடன் 50.3 சதவீதத்தையும், ரணில் விக்ரமசிங்க 47,06,366 வாக்குகளுடன் 48.4 சதவீதத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் 1, 80,786 வாக்கு வித்தியாசம் காணப்பட்டது.

இந்த தேர்தல் நடைபெறும் காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், அந்த பகுதிகளில் வாக்களிக்க விடுதலை புலிகள் தடை விதித்திருந்தனர்.

இந்த தடையானது, ரணில் விக்ரமசிங்க தோல்வி அடைய பிரதான காரணமாக அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 9,52,324 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காணப்பட்ட போதிலும், 94,398 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

படக்குறிப்பு,

2010 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டுள்ள இல்லியாஸ் ஐதுரூஸ் முகம்மட், தற்போது சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அதில் 71,321 வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றிருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடத்தக்களவு வாக்குகளை பெற்றார்.

குறிப்பாக, கிழக்கில் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் 28,836 வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்டதோடு, ரணில் விக்ரமசிங்க 1,21,514 வாக்குகளை பெற்றார்.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டங்களில் 9,53,936 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

எனினும், 5,95,251 வாக்காளர்கள் மட்டுமே வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

2010 ஜனாதிபதித் தேர்தல்

30 வருட கால யுத்தம் நிறைவடைந்த பின்னணியில் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.

அந்த தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் அதிகளவிலான வாக்குகளை சரத் பொன்சேகா பெற்றுக் கொண்டார்.

வட மாகாணத்தில் 9,88,334 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டநிலையில், 2,98,898 வாக்குகள் பதிவு செயயப்பட்டன.

படக்குறிப்பு,

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அலவி

இதில் சரத் பொன்சேகா பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 1,86,410 ஆகும்.

கிழக்கு மாகாணத்தில் சரத் பொன்சேகாவிற்கு 3,86,823 வாக்குகள் கிடைத்ததோடு, மஹிந்த ராஜபக்ஷவிற்கு 2,72,327 வாக்குகள் கிடைத்திருந்தன.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சரத் பொன்சேகா நுவரெலிய மாவட்டத்தில் மட்டுமெ வெற்றிபெற்றிருந்தார்.

இந்த நிலையில், தமிழ் பேசும் சமூகம் அப்போதைய தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே வாக்களித்திருந்தது.

இதன்படி, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 6,015,934 வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளையே பெற்றிருந்தார்.

2015 ஜனாதிபதித் தேர்தல்

படக்குறிப்பு,

சுயேச்சையாக போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கம்

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.

தனது பதவி காலம் நிறைவடைவதற்கு சுமார் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிராக, அவரது கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கினார்.

இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளினால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

2015ஆம் ஆண்டு வடக்கில் 7,82,297 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், அந்த தேர்தலில் 5,31,014 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

படக்குறிப்பு,

அபே ஜாதிக பெரமுன கட்சி சார்பாக போட்டியிடும் ஊடகவியலாளரான எஸ். குணரத்னம்

வடக்கில் மைத்திரிபால சிறிசேனவிற்கு சுமார் 4 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன.

கிழக்கில் முஸ்லிம் மற்றும் தமிழ் வாக்குகளினால் மைத்திரிபால சிறிசேன அதிகபடியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது சிறப்பு அம்சமாகும்.

நாடு முழுவதுமாக 6,217,162 வாக்குகளுடன் 51.28 சத வீத வாக்குகளை பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதியாக ஒருவரை தெரிவு செய்ய பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ள நிலையில், இந்த முறை தேர்தலும் அதே வகையில் அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :