சுஜித் மீண்டு வர இலங்கை முள்ளிவாய்க்கால், யாழ்ப்பாணத்தில் சிறப்பு பிரார்த்தனை

சுஜித்

திருச்சி - மணப்பாறை - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் சிக்குண்டுள்ள சுஜித் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த பகுதியான முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள முள்ளிவாய்க்கால் தேவாலயத்தில் இன்று விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக இந்த பகுதியைச் சேர்ந்த பல சிறார்கள் ஒன்று திரண்டு இந்த கூட்டு பிரார்த்தனையை நடத்தியுள்ளனர்.

'சுஜித் மீண்டு எழுந்து வா' என்ற முழக்கமும் பிரார்த்தனைகளில் இடம்பெற்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியிலும் மக்கள் பிரார்த்தனைகளை நேற்றைய தினம் நடத்தியிருந்தனர்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில், கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.

அத்துடன், இலங்கையைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் சுஜித்தை பற்றியே கருத்துக்களை பகிர்ந்து வருவது மாத்திரமன்றி, பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் தமிழக செய்தி தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சமூகம் மாத்திரமன்றி, சிங்களவர்களும் கூட சுஜித் தொடர்பிலான செய்திகளை அதிகளவில் அவதானித்து வருகின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :