இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (அக்டோபர் 31ஆம் தேதி) நாளையும் (நவம்பர் 01ஆம் தேதி) நடைபெறுகிறது.

இலங்கையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 6,59,514 பேர் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 லட்சத்து 17 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கண்டி மாவட்டத்திலிருந்து இம்முறை அதிகளவில் தபால் மூலம் வாக்களிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இலங்கையிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் மொத்தம் 1,59,92,096 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

இவர்களில் கம்பஹா மாவட்டத்தில்தான் அதிகளவு பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் (17,51, 892) உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி செப்டம்பர் 18ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. அதற்கிணங்க நவம்பர் 16ஆம் தேதி, இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்றவர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலப் பகுதியாக செப்டம்பர் 19ஆம் தேதி தொடக்கம் அக்டோபர் 6-ஆம் தேதி நண்பகல் 12.00 மணி வரை நிர்ணயிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களின் வேட்புமனுக்கள் அக்டோபர் 7ஆம் தேதி முற்பகல் 9.00 மணி முதல் 11.00 மணி வரை கையேற்கப்பட்டன.

இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். ஆயினும், அவர்களில் 35 பேர் மட்டுமே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தவர்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகைளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 18 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 15 பேர், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 2 பேர்களாவர்.

இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மொத்தம் 70 உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தபால் மூலம் வாக்களிக்கிறபோது, வழங்கப்படும் வாக்குச் சீட்டை படம் எடுத்தல் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களிலிருந்து 500 மீட்டர் வரையிலான பகுதிகளுக்குள், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

விரும்பியவருக்கு தபால்மூலம் வாக்களிக்குமாறு வடகிழக்கு தமிழ் மக்களிடம் கோரிக்கை

இதனிடையே, தபால் மூலம் வாக்களிக்கிறபோது சுயாதீனமாக செயற்படுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசாங்க ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞானம் தொடர்பில் இதுவரை ஆராயப்படாத நிலையிலேயே தமிழ் கட்சிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (30) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

படக்குறிப்பு,

மாவை சேனாதிராஜா

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் சார்பில் செல்வம் அடைகலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துக்கொண்டனர்.

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞானம் இதுவரை வெளியாகாத நிலையில், தமக்கு எந்தவித தீர்மானத்தையும் எட்ட முடியாது என இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தபால் மூலம் வாக்களிக்கிறபோது மக்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்க முடியும் என தமிழ் கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பேசும் சமூகத்திடம் கோரியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :