இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இந்திய ஆதரவு உண்டா? - சிவாஜிலிங்கம் பேட்டி

சிவாஜி லிங்கம்

இலங்கை தமிழ் பிரஜையொருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது என தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சர்வதேசமயமாக்கவும், தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவுமே இந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, ஐந்து தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டுள்ள, ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் ஏற்றுக்கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்த கோரிக்கைகளையே தாம் தென்னிலங்கை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டதாகவும், அந்த கோரிக்கைகள் தற்போது தென்னிலங்கை மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈழத் தமிழர்களின் 13 அம்ச கோரிக்கைகள்

01.புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமைக்கு உடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

02.இறுதிப் போரியில் இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச பொறிமுறைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

03.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.

04.தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

05.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

06.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையில் இருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

07.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

08.வடக்கிற்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால், மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். அத்துடன், கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

09.அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

10.தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட திணைக்களங்களின் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

பிரபாகரனை நான் காட்டிக்கொடுத்தேனா? | Karuna Interview | LTTE

11.போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

12.வடக்கு - கிழக்கிற்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தை சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

13.வடக்கு - கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி, அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும்.

13 அம்ச கோரிக்கை நாட்டை பிளவுப்படுத்துமா?

இந்த 13 அம்ச கோரிக்கைகளில் நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை என எம்.கே.சிவாஜிலிங்கம் கூறுகின்றார்.

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியையே தாம் கோருவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க முதல் பலரும் சமஷ்டிக்கான கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் கவலை வெளியிடுகின்றார்.

சமஷ்டி என்பது பிரிவினை கிடையாது என எம்.கே.சிவாஜிலிங்கம் கூறுகிறார்.

சமஷ்டி என்பது பிரிவினை என்ற கருத்தை ஒரு சில இனவாதிகள், சிங்கள மக்களிடம் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க ஆகிய மூன்று பிரதான வேட்பாளர்களும் தமிழர்களுக்கு எந்தவிததத்திலும் ஆதரவை வழங்கப் போவதில்லை என எம்.கே.சிவாஜிலிங்கம் கூறுகிறார்.

இலங்கை தேர்தலில் இந்தியாவின் தலையீடு

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ள பின்னணியில், இந்தியா பூகோள நலன்சார் விடயம் காரணமாக இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் ஈழப் போராட்டத்திற்கான உதவிகள் கிடைத்த போதிலும், ராஜீவ் காந்தியின் கொலையின் பின் ஈழப் போருக்கான உதவிகள் இந்தியாவிடமிருந்து கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

எனினும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வலுப்பெற்ற பின்னணியில் இந்தியாவின் தலையீடு இலங்கை விடயத்தில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைத் தந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் விடயத்தில் இந்தியா கடந்த காலங்களில் உரிய அக்கறை கொள்ளவில்லை என அவர் நினைவூட்டினார்.

எனினும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் குறித்து இந்தியா தற்போது அதிகளவில் அக்கறை செலுத்தி வருவதாகவும், அதனை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பில் இந்தியா மேலும் அக்கறை கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் விவகாரத்திலும் இந்தியா தற்போது அதிக அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈழத் தமிழர்கள் இலங்கையின் சுயாட்சி பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியாவின் சிந்தனை காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ''சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்ற பாரதியாரின் வரிகளை இலங்கை நாடாளுமன்றத்திற்குள் கூறியதை எம்.கே.சிவாஜிலிங்கம் இதன்போது நினைவூட்டினார்.

இந்த வரிகளை பாரதியார் கூறியமைக்காக, பிரதமர் நரேந்திர மோடியை குறைகூற முடியாது என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச கோரிக்கையான சமஷ்டி ஆட்சி முறைக்கு இந்தியா ஆதரவான சமிக்ஞைகளை காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.

Gotabhaya Rajapaksaவை தமிழர்கள் எதிர்க்கவில்லை - Sri Lanka ஆறுமுகம் தொண்டைமான்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்