இலங்கை ஜனாதிபதி தேர்தல்: காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - முடிவில்லாத துயரக் கதை

Sri Lankan Tamil woman holds a picture of a missing loved, Missing people organization office படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA / getty images
Image caption 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. கோப்புப்படம்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஒருபக்கம் உச்சகட்டத்தில் நடந்துகொண்டிருக்க அந்நாட்டில் கடந்த பல ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாகீரதியின் 18 வயது மகனான ராஜதுரை ராஜேஷ் கண்ணா கடந்த 2005ஆம் ஆண்டு ட்யூஷனுக்குச் சென்று வீடு திரும்பவில்லை. அவரும் முறையிடாத இடங்கள் இல்லை. கடந்த 14 ஆண்டுகளாக அவர் தட்டாத கதவுகள் இல்லை. ஆனால், ராஜேஷ் கண்ணா என்ன ஆனார் என்பது இப்போதுவரை தெரியவில்லை.

முழங்காவிலைச் சேர்ந்த 74 வயதாகும் ஆறுமுகம் நகுலேஸ்வரி கடந்த 17 ஆண்டுகளாக தன் மகன் சந்திரபாலனைத் தேடிவருகிறார். 2002ஆம் ஆண்டு ஒரு நாள் ராணுவம் இவரது வீட்டைத் தேடி வந்தது. சந்திரபாலனை விசாரிக்க வேண்டுமென சொன்னதால், விசாரணைக்குச் சென்றார் அவர். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

Image caption ஆறுமுகம் நகுலேஸ்வரியின் மகன் மட்டுமல்ல, அவரது கணவரும் காணாமல் போனவர்தான்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு அருகில் அமர்ந்து கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக போராடிவரும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு நீண்ட, துயரமான கதை இருக்கிறது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடந்த 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

வெளியே சென்று வீடு திரும்பாதவர்கள், ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள், 2009ல் போர் முடிவுக்கு வந்தபோது சரணடைந்தவர்கள் என காணாமல்போன இவர்களது உறவினர்கள் கடந்த 30 ஆண்டுகளாக நம்பிக்கை இழக்காமல் தங்கள் உறவுகளைத் தேடிவருகின்றனர்.

ஆறுமுகம் நகுலேஸ்வரியின் மகன் மட்டுமல்ல, அவரது கணவரும் 90களில் காணாமல் போனவர்தான். இருவரையும் இப்போதும் நம்பிக்கையிழக்காமல் தேடிவருகிறார் அவர்.

"இருவருக்கும் மரணச் சான்றிதழ் தருவதாக அரசாங்கம் சொல்கிறது. அது தேவையில்லை. எனக்கு அவர்கள் உயிரோடு வேண்டும்" என்கிறார் அவர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தரக்கோரி நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. வவுனியாவில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகவும் யாழ்ப்பாணத்தில் 50 நாட்களுக்கு மேலாகவும் காணமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலருக்கு தங்கள் உறவினர்கள் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தம் வாழ்வின் இறுதிக் கட்டத்திலாவது அவர்களைப் பார்த்துவிட மாட்டோமா என காத்திருக்கிறார்கள்.

காணமல் போனோர் குறித்து விசாரிப்பதற்காக கடந்த 2017ல் சாலிய பீரிஸ் தலைமையில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் 2019லிருந்து யாழ்ப்பாணத்திலும் செயல்பட்டு வருகிறது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களைப் பொறுத்தவரை இந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கவில்லை. அதனை மரணச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் என குற்றம் சாட்டுகின்றனர்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA / getty images
Image caption கோப்புப்படம்

இந்தக் குற்றச்சாட்டு சரியானதல்ல என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

"இது மிகத் தவறான குற்றச்சாட்டு. அந்த அலுவலகம் காணாமல் போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரித்து, அவர்கள் காணமல் போனதற்கான சான்றிதழை முதலில் வழங்கும். அந்தச் சான்றிதழ் ஒரு தற்காலிக ஏற்பாடு. அதையடுத்து அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். தொடர்ந்து அவர்கள் எப்படி காணாமல் போனார்கள், யாரால் காணாமல் போனார்கள் என்பது விசாரிக்கப்படும். உலகம் முழுவதுமே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் என்பது மிகச் சிக்கலானது. அதனைத் தீர்ப்பதற்கான ஒரு வழிதான் இந்த அலுவலகம்" என்கிறார் சுமந்திரன்.

தற்போது போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைப் பொறுத்தவரை, முழுமையான விசாரணை நடந்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். "காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகளின் நடவடிக்கைகள் சரியானதாக இல்லை. இதில் ஐ.நா. தலையிட வேண்டும்" என்கிறார் கொக்குவில்லைச் சேர்ந்த சுகந்தினி.

காணாமல் போனவர்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மட்டும் 2000க்கும் அதிகமான முறைப்பாடுகள் பெறப்பட்டிருக்கின்றன. அங்குள்ள காணாமற்போன ஆட்களுக்கான அலுவலகம் இது குறித்து பேசுவதற்கு மறுத்துவிட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :