இலங்கையில் மண்சரிவு - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

இலங்கையில் மண்சரிவு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு படத்தின் காப்புரிமை Krishanthan

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 1,156 குடும்பங்களைச் சேர்ந்த 4,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

இலங்கையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்த கடும் மழையுடனான வானிலையினால் நுவரெலியா பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா - வலபனை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மண் சரிவில் சிக்குண்டவர்களை தேடும் நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Krishanthan

இலங்கையில் மழையுடனான வானிலையினால் 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பதுளை, அம்பாறை, மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, நுவரெலியா, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

மண் சரிவு அபாயம் மற்றும் வெள்ளப் பெருக்கு அபாயம் காரணமாக சுமார் 300க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லி மீட்டர் தொடக்கம் 150 மில்லி மீட்டர் வரையான மழை வீழ்ச்சி எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அபாயகரமான இடங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

களு கங்கை, நில்வலா கங்கை மற்றும் அத்தனகலஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த ஆறுகளுக்கு அருகே வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Malarvendan

குறிப்பாக களு மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளினால் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரையான மழை பதிவாகும் என இடர் முகாமைத்துவ நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மழையுடனான வானிலையினால் மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயமும் விடுக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு ஏற்பட்டுள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்