இலங்கை பெருமழை: பல இடங்களில் மண்சரிவு - மக்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

இலங்கை வெள்ளம் படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்ற நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) மாலை விடுத்தது.

நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகர நிலைமையினால், வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், அநுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகும் எனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடனான மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் திணைக்களத்தின் அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம்

பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கண்டி - உடுதும்பர பகுதிக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பதுளை பகுதியில் இன்று மாலை பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.

பதுளை - பசறை பிரதான வீதியின் பத்தாம் கட்டை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாகப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நிலவி வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, பதுளை - பசறை வீதி அபாயகரமான வீதி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், பதுளை - பசறை வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அத்துடன், எல்ல - வெல்லவாய வீதியிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பதுளை மாவட்டத்திற்கு தொடர்ந்து பல மணிநேரம் கடும் மழையுடனான வானிலை நிலவி வருவதாக பிரதீப் கொடிபிலி கூறுகின்றார்.

பதுளை - லுணுகல பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று மாலை ஒரு தொகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவி வருகின்ற நிலையில், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய இடங்களிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் பல மணிநேரம் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கொழும்பு பகுதியில் பொரள்ளை, தும்முல்ல, ஹோட்டன் பிளேஸ், டவுன்ஹொல் ஆகிய பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ள அதேவேளை, குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் பல மணித்தியாலங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் விபரம்

இலங்கையில் கடந்த சில வாரக் காலமாகப் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் 1764 குடும்பங்களைச் சேர்ந்த 5843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ நிலையம் இறுதியாக இன்று வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

நுவரெலியா - வலபனை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருந்தனர்.

மற்றுமொரு சிறுவன் இந்த மண்சரிவில் காணாமல் போன நிலையில், அவரின் சடலத்தைக் கண்டெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெரிதும் பாதிக்கப்பட்ட சுமார் 900க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்