இலங்கை கனமழை: கதிர்காமம் கோயில் நீரில் மூழ்கியது, பல பகுதிகளில் மண்சரிவு

மழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப் படம்

இலங்கையில் வியாழக்கிழமை இரவு முதல் முதல் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் பெருமளவிலான அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதேபோன்று, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய தினம் 75 மில்லிமீற்றர் முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் வியாழக்கிழமை இரவு முதல் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலையினால் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.

இதன்படி, பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பெய்துவரும் மழையுடனான வானிலையினால் பல தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. சுமார் 25திற்கும் அதிகமான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிடுகின்றது.

தெதுருஓயா, கலா ஓயா, கிரிந்தி ஓயா மற்றும் மீ ஓயா ஆகிய நீர்த்தேக்கங்கள் மற்றும் அம்பன் ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன், ராஜாங்னை, லுனுகம்வெஹேர, வேஹேரகல, தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், அவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

புத்தளம் பகுதியிலுள்ள தம்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால். மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தம்போவ நீர்த்தேக்கத்திலிருந்து செக்கனுக்கு 11,500 கன அடி நீர் வெளியேறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள அதேவேளை, செக்கனுக்கு 27,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் மழையுடனான வானிலையினால் மகாவலி கங்கையின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்துள்ளதால், அதன் இரு புறங்களிலும் வாழும் மக்கள் கவனமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் சுங்காவில பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பொலன்னறுவை - சோமாவத்தி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை நகர் பகுதியிலுள்ள தம்மன் ஆறு உள்ளிட்ட பல ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால் தம்புள்ளை நகரின் பல தாழ் நிலப் பகுதிகளும், பிரதான வீதிகளும் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

மலையகத்தின் பல ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள அதேவேளை, வெள்ளப் பெருக்கு ஏற்படும் பகுதிகளிலுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

செல்ல கதிர்காமம் கோயில் நீரில் மூழ்கியது

இலங்கை மக்களின் மிக முக்கிய புனித பூமியான, செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

மாணிக்கக்கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

செல்ல கதிர்காமம் கோயிலின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கதிர்காமம் முருகன் கோயிலின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆறுகளை அண்மித்துள்ள மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம்

மலையகத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாத்தளை, கண்டி, நுவரெலிhய மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அறிகுறிகள் தென்படும் பகுதிகளை சேர்ந்த மக்களை வெளியேறுமாறும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக பதுளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளின் பல வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டோர் விபரம்

இந்த மோசமான வானிலையினால் 859 குடும்பங்களைச் சேர்ந்த 2,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களில் 2033 பேர் 21 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளின் இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படையாயினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளைப் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களின் ஊடாக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: