இலங்கை கனமழை: ஐந்து பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை இயற்கை அனர்த்தங்கள் - ஐவர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

13 மாவட்டங்கள் மழையுடனான வானிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

19,095 குடும்பங்களைச் சேர்ந்த 65,294 பேர் மழையுடனான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் 125 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, 6,704 குடும்பங்களைச் சேர்ந்த 15,510 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழையுடனான வானிலை தொடர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழையுடனான வானிலையினால் மலையகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் உள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்புக்கள்

இலங்கையிலுள்ள நீர்த்தேக்கங்களில் 36 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுமையாக உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளமையினால் சோமாவதி பகுதி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் குறித்த பகுதியிலுள்ள அனைத்து வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

குறித்த பகுதியில் அனைத்து நடவடிக்கைகளும் படகுகளின் மூலமே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நிலையம் குறிப்பிடுகின்றது.

பட மூலாதாரம், Getty Images

திருகோணமலை - கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள், 9 அங்கும் வரை திறக்கப்பட்டுள்ளதுடன், செக்கனுக்கு 1100 கன அடி நீர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறி வருவதாக அந்த நிலையம் கூறியுள்ளது.

இதனால் கந்தளாய் பகுதியை அண்மித்துள்ள தாழ் நிலப் பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும், மட்டக்களப்பு, அம்பாறை, உள்ளிட்ட பகுதிகளிலும் மழையுடனான வானிலை தொடர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது,

இந்த மாவட்டங்களிலும் பல இடங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி உத்தரவு

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் போது, சுற்று நிரூபங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை தடையாகக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அநுராதபுரத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை கோட்டாபய ராஜபக்ஷ இன்று நேரில் சந்தித்து விடயங்களை ஆராய்ந்திருந்தார்.

அதன்பின்னர் அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை நடத்திய போதே இந்த உத்தரவை விடுத்திருந்தார்.

பொலன்னறுவை பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களையும் ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், எந்தவொரு நபரையும் அசௌகரியத்திற்குள் உள்ளாக்க கூடாது எனவும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்களின் சுகாதார வசதிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: