வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல் - என்ன நடக்கிறது அங்கே?

சித்தரிப்புக்காக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

இலங்கை வவுனியா - பொகஸ்வெவ பகுதியில் ராணுவ சிப்பாய் ஒருவர் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவரது துப்பாக்கியை கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.20 அளவில் நடைபெற்றதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடமைகளை நிறைவு செய்த ராணுவ சிப்பாய், ராணுவ முகாமை நோக்கி சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ராணுவ சிப்பாய் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை ராணுவ போலீசார் மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின் பிரகாரம், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரை அநுராதபுரம் - கொக்கிரவ பகுதியில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் எதற்காக நடத்தப்பட்டுள்ளது மற்றும் துப்பாக்கி எதற்காக கடத்திச் செல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்க ராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வவுணதீவு போலீசார் கொலையும், ஈஸ்டர் தாக்குதலும்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி இதேபோன்றதொரு சம்பவம் பதிவாகியிருந்தது.

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியிலுள்ள சோதனை சாவடியில் கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட போலீஸ் உத்தியோகத்தர்களின் உடலில் வெட்டு காயங்களும் இருந்தமை கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த கொலை சம்பவத்துடன் நேரடி தொடர்புள்ளமை கண்டறியப்பட்ட நிலையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கடந்த மே மாதம் 11ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், அரச பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது.

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு வவுணதீவு காவல்துறை உத்தியோகத்தர்களை கொலை செய்ததன் ஊடாகவே தமது பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை பாதுகாப்பு பிரிவினர் அப்போது வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: