இலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை: என்ன நடக்கிறது அங்கே? - விரிவான தகவல்கள்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட தடை: என்ன நடக்கிறது அங்கே?

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கீதத்தை இரண்டு தடவைகள் பாடுவதிலேயே நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறினார்.

இந்தியாவிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை அவர் இதன்போது நினைவூட்டினார்.

பட மூலாதாரம், Getty Images

அரசியல்வாதிகள் கண்டனம்

தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் இதனை பிபிபி தமிழுக்கு கூறினார்.

தேசிய கீதம் இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.

பட மூலாதாரம், Ramalingam Chandrasegaran - Facebook

படக்குறிப்பு,

ராமலிங்கம் சந்திரசேகரன்

தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவது என்ற தீர்மானமானது, நாட்டிலுள்ள இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் ஒரு விடயம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயமானது, இன நல்லிணக்கத்திற்கோ அல்லது மத நல்லிணக்கத்திற்கோ சாதகமான ஒன்றல்ல எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது, இனவாத, மதவாத செயற்பாடுகள் மாத்திரமன்றி, ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.

இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு சென்று, தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே தான் இதனை கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட முடியாது என்ற அறிவிப்பைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் சிங்கள மொழி எவ்வாறு அரசகரும மொழியாகக் காணப்படுகின்றதோ, அதேபோன்று தமிழ் மொழியும் அரசகரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்த நிலையில், சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.

சிங்கள மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக, நாட்டை சிங்கள மயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் பேசப்படும் என செல்வம் அடைகலநாதன் உறுதியளித்தார்.

சிங்கள மொழிக்கு உள்ள அதிகாரம், தமிழ் மொழிக்கும் காணப்படுகின்றமையினால், அதனை யாரும் தடுத்து நிறுத்தி விட இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் குறிப்பிடுகின்றார்.

மனோ கணேசனின் ட்விட்டர் பதிவு

இலங்கையின் 2020ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம், தமிழ் மொழியில் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்டமையானது, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரிய பாதிப்பான விடயம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

தனது ட்விட்டர் தள குறிப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Mano Ganeshan Twitter

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் தேசிய மற்றும் உத்தியோகப்பூர்வ மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இலங்கை அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு சுதந்திர கிடைத்ததை நினைவுக்கூறும் வகையில் டோரிங்டன் பகுதியிலுள்ள சுதந்திர சதுக்கத்தை திறக்கும் நிகழ்வு 1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் தேதி நடத்தப்பட்டதாகவும், அதில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் பதிவிட்டுள்ளார்.

'தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடலாம்'

இலங்கையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் இந்த நாட்டின் தேசிய மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதென சிரேஷ்ட சட்டத்தரணி ராஜகுலேந்திரா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்துடன், தேசிய கீதம் சிங்களத்தில் எவ்விதம் இசைக்கப்பட வேண்டும், தமிழ் மொழியில் எவ்விதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையில் ஓரினத்தவர்கள் மாத்திரமே வாழ்கின்றார்கள் என்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனின் கருத்தை சட்டத்தரணி ராஜகுலேந்திரா நிராகரித்தார்.

இலங்கையர்களின் பிறப்பு சான்றிதழில் தேசிய இனம் என்ன என வினவப்பட்டுள்ளதாகவும், அதுவொரு அரச ஆவணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு தேசிய இனம் என்ற இடத்தில் இலங்கை தமிழ், சிங்களவர், இலங்கை சோனகர் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற நான்கு இனங்களில் யார் என்பதை எழுத வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறென்றால், கடந்து வந்த அரசாங்கங்கள் இலங்கையில் நான்கு இனங்கள் வாழ்ந்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இந்நிலையில், இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாட அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ராஜகுலேந்திரா குறிப்பிடுகின்றார்.

2016ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து சுதந்திர தின நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: